சமுதாயத்தில் அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்-முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு
சமுதாயத்தில் அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
பெங்களூரு:
பொருளாதார புரட்சி
கர்நாடக அரசின் ஆதிதிராடவிடர்-பழங்குடியினர் சமூக நலத்துறை சார்பில் வால்மீகி ஜெயந்தி விழா பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:-
நாட்டில் கல்வி, சமூக, பொருளாதார புரட்சியை ஏற்படுத்த பிரதமர் மோடி சபதம் ஏற்றுள்ளார். பிரதமரின் ஆசையான அனைத்து தரப்பு மக்களும் வளர்ச்சி பெற வேண்டும் என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். அந்த நோக்கத்தில் விதான சவுதாவில் இருந்து வெளியாகும் ஒவ்வொரு உத்தரவும் சமூகநீதி, சமத்துவத்தை உறுதி செய்வதாக இருக்கும். சமுதாயத்தில் அனைத்து தரப்பு மக்களும் சகோதரர்களை போல் வாழ வேண்டும்.
சமமான வாய்ப்புகள்
அதன் மூலம் வால்மீகிக்கு நாம் கவுரவத்தை சமர்பிக்க வேண்டும். வால்மீகி, புத்தர், பசவண்ணர் ஆகியோர் சமத்துவத்தை வலியுறுத்தினர். அரசியல் சாசனத்திலும் அம்பேத்கர் சமத்துவத்தை நிலைநாட்டியுள்ளார். நடையை முன்னெடுத்து வைத்தால் மட்டுமே வெற்றி சாத்தியமாகும். ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். இந்த சமுதாயத்தில் அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்.
101 அம்பேத்கர் மாணவர் தங்கும் விடுதிகள் மற்றும் 5 பெரிய விடுதிகளை கட்ட முடிவு செய்துள்ளோம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டிற்கு ரூ.28 ஆயிரம் கோடி நிதி வழங்கியுள்ளோம். இந்த சமுதாயங்களை சேர்ந்த மக்கள் நிலம் வாங்க ரூ.20 லட்சம், வீடு கட்ட ரூ.2 லட்சம், 75 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குகிறோம். ஒவ்வொரு தொகுதியில் இந்த சமுதாயங்களை சேர்ந்த 100 இளைஞர்களுக்கு தலா ரூ.10 லட்சம் சுயதொழில் செய்ய வழங்குகிறோம்.
சுயமரியாதை மிக்கவர்கள்
அம்பேத்கரின் கனவை நனவாக்க நாங்கள் பாடுபட்டு வருகிறோம். வரும் நாட்களில் உங்களுக்கு ஆதரவாக பணியாற்ற உங்களின் ஆசி எங்களுக்கு தேவை. கடினமாக உழைப்பவர்களின் வாழ்க்கையை நான் மிக அருகில் இருந்து பார்த்துள்ளேன். ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளோம். அவர் எழுதிய ராமாயனம் மனதை தொடுவதாக உள்ளது.
வால்மீகி சமூக்தின் பிறருடன் ஒப்பிடுகையில் குறைந்தவர்கள் அல்ல. கடவுளுக்கு தனது கண்களை அர்ப்பணித்து கடவுளையே தனது பக்கம் ஈர்த்தவர். வால்மீகி சமூக மக்கள் சுயமரியாதை மிக்கவர்கள். அவர்கள் யாருக்கும் அடிமைகள் அல்ல.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.
இதில் போக்குவரத்து மற்றும் ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நலத்துறை மந்திரி ஸ்ரீராமுலு, நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.