ஒவ்வொரு சிவசேனா தொண்டரும் இயற்கையான கூட்டணியையே விரும்புகிறார்கள்; ஷிண்டே வீடியோ வெளியீடு


ஒவ்வொரு சிவசேனா தொண்டரும் இயற்கையான கூட்டணியையே விரும்புகிறார்கள்; ஷிண்டே வீடியோ வெளியீடு
x

ஒவ்வொரு சிவசேனா தொண்டரும் இயற்கையான கூட்டணியையே விரும்புகிறார்கள் என ஏக்நாத் ஷிண்டே வெளியிட்டு உள்ள வீடியோவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



புனே,



மராட்டியத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவுடன் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா ஆட்சி நடந்து வரும் சூழலில், கடந்த சில நாட்களாக மராட்டிய மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் ஓரணியில் திரண்டு உள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

அசாமின் கவுகாத்தி நகரில் உள்ள புளூ ரேடிசன் ஓட்டலில், சிவசேனா மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள், ஆளும் அரசுக்கு எதிராக மறைமுக போர்க்கொடியை உயர்த்தி உள்ளனர். அவர்களை ஆலோசனை நடத்த மும்பைக்கு வரும்படி, சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் அழைப்பு விடுத்தும் பலனில்லை. கூட்டணி மீது அதிருப்தி தெரிவித்ததுடன், கூட்டணியை விட்டு வெளியே வரும்படி சிவசேனாவுக்கு ஷிண்டே அழைப்பு விடுத்து உள்ளார்.

கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த ஷிண்டே, சட்டமன்ற கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக அஜய் சவுத்ரியை அந்த பதவியில் அமர்த்தும் முடிவுக்கு துணை சபாநாயகர் ஒப்புதல் வழங்கி உள்ளார். ஷிண்டே, மொத்தமுள்ள 55 சிவசேனா எம்.எல்.ஏ.க்களில் 40 பேர் தனக்கு ஆதரவாக உள்ளனர். தவிர 12 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் உடன் உள்ளனர் என கூறியுள்ளார்.

இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே டுவிட்டரில், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு நாம் பாரம்பரிய எதிரிகள். தொகுதிகளில் நமக்கான முதன்மையான சவாலாக இருப்பவர்கள் அவர்கள். இயற்கையான கூட்டணி ஏற்படுத்த வேண்டும் என நாங்கள் முதல்-மந்திரி உத்தவிடம் கேட்டு கொண்டோம் என சிவசேனா எம்.எல்.ஏ. சிமன்ராவ் பாட்டீல் வீடியோ ஒன்றில் கூறிய விசயங்களை வெளியிட்டு உள்ளார்.

அந்த வீடியோவில் தொடர்ந்து பேசிய பாட்டீல், முதல்-மந்திரியிடம் இருந்து எந்த பதிலும் வராத நிலையில், எங்களுடைய தலைவர் ஷிண்டே நிலைப்பாட்டை எடுத்துள்ளார். ஒவ்வொரு சிவசேனா தொண்டரும் இயற்கையான கூட்டணியையே விரும்புகிறார்கள். நாங்கள் சிவசேனா எம்.எல்.ஏ.க்களில் 3ல் 2 பங்கு உறுப்பினர்கள் மற்றும் 10 சுயேச்சைகளின் ஆதரவை பெற்றுள்ளோம் என கூறியுள்ளார்.


Next Story