நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பார்த்து சிலர் பொறாமைப்படுகின்றனர் - நிர்மலா சீதாராமன் பேச்சு


நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பார்த்து சிலர் பொறாமைப்படுகின்றனர் - நிர்மலா சீதாராமன் பேச்சு
x

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கண்டு நாடாளுமன்றத்தில் உள்ள சிலர் பொறாமைப்படுகின்றனர் என நாடாளுமன்றத்தில் நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கியது. இந்த கூட்டம் டிசம்பர் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 17 அமர்வுகள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்துள்ளது.

இந்தநிலையில் இன்று நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின் போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த உறுப்பினர் சுப்ராயன், மத்திய அரசு பெரு நிறுவனங்களுக்கு லட்சக்கணக்கான கடன்களை ரத்து செய்துள்ளது. ஆனால் 0.82% மட்டும் இருக்க கூடிய உயர்கல்விக்காக கடன் பெற்ற ஏழை மாணவர்களின் கடனை ஏன் ரத்து செய்ய கூடாது? உயர்கல்வி கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்யுமா? என கேள்வியே எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், பெருநிறுவனங்கள் கடனை மத்திய அரசு ரத்து செய்யவில்லை என்றார்.

அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பொய்! பொய்! என கூச்சலிட்டு போது பொய் என்ற வார்த்தை நாடாளுமன்றத்தில் பயன்படுத்த கூடாது அதனை நீக்க வேண்டும் என நிர்மலா சீத்தாராமன் கோரினார்.

மாணவர்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை ஏதோ பெரு நிறுவனங்களுக்கு அரசு வழங்குவது போல உள்நோக்கத்துடன் எதிர்கட்சியினர் பேசுகிறார்கள், இது முற்றிலும் தவறு. பெருநிறுவனங்களிடம் இருந்து இப்போதும் பணம் வசூலிக்கப்பட்டு, அதை சம்மந்தப்பட்ட வங்கிகளுக்கு மத்திய அரசு வழங்கி வருவதாக தெரிவித்தார்.

மேலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கண்டு நாடாளுமன்றத்தில் சிலர் பொறாமைப்படுவது வருத்தமளிக்கிறது. இந்தியா மிக வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது, ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு அது பிரச்சினையை ஏற்படுத்துகிறது. இந்தியாவின் வளர்ச்சி குறித்து அனைவரும் பெருமிதம் கொள்ள வேண்டும் ஆனால் சிலர் அதை நகைச்சுவையாக எடுத்துக்கொள்கிறார்கள் என்றார்.


Next Story