நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரம்: ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியின் மகன் டெல்லியில் கைது


நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரம்:  ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியின் மகன் டெல்லியில் கைது
x

நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரத்தில் சாய்கிருஷ்ணாவிற்கு தொடர்பு எதுவும் இருக்குமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

புதுடெல்லி,

கடந்த 13-ம் தேதி நாடாளுமன்றத்தின் பார்வையாளர் மாடத்தில் இருந்த 2 பேர் திடீரென மக்களவைக்குள் குதித்து, வண்ண புகை குப்பிகளை வீசினர். இதுபோல நாடாளுமன்ற வளாகத்திலும் 2 பேர் கோஷங்களை எழுப்பியவாறு வண்ண புகை குப்பிகளை வீசினர்.

இதையடுத்து, 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்திய நாடாளுமன்றத்திற்குள் நடைபெற்ற இந்த பாதுகாப்பு விதி மீறல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நாடாளுமன்ற அத்துமீறல் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரை சேர்ந்த ஐடி ஊழியரான சாய்கிருஷ்ணா ஜகாளி என்பவரை டெல்லியில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்து வண்ணப்புகை குப்பிகளை வீசிய மனோரஞ்சன் என்பவரின் நெருங்கிய நண்பர் சாய்கிருஷ்ணா ஆவார்.

மனோரஞ்சனும் சாய்கிருஷ்ணாவும் பெங்களூரில் ஒன்றாக படித்துள்ளனர். எனவே நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரத்தில் சாய்கிருஷ்ணாவிற்கு தொடர்பு எதுவும் இருக்குமா? என்ற கோணத்தில் போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சாய்கிருஷ்ணாவின் தந்தை கர்நாடக மாநில காவல்துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரத்தில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியின் மகன் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story