குஜராத் சட்டமன்ற தேர்தல்: முதல் மந்திரி வேட்பாளரை அறிவித்தது ஆம் ஆத்மி
குஜராத் சட்டமன்ற தேர்தலில் முதல் மந்திரி வேட்பாளராக முன்னாள் தொலைக்காட்சி தொகுப்பாளர் இசுடான் கத்வியை அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
குஜராத்தில் வரும் டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகள் என இரு கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. குஜராத் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அங்கு ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. குறிப்பாக ஆம் ஆத்மி பல மாதங்களுக்கு முன்பே குஜராத்தில் தேர்தல் பணியை தொடங்கி பிரசாரத்தை தொடங்கி விட்டது. வேட்பாளர்களையும் பல்வேறு கட்டங்களாக அறிவித்து தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது.
இந்த நிலையில், குஜராத் சட்டமன்ற தேர்தலில் முதல் மந்திரி வேட்பாளராக முன்னாள் தொலைக்காட்சி தொகுப்பாளர் இசுடான் கத்வியை அறிவித்துள்ளது. ஆம் ஆத்மி முதல் மந்திரி வேட்பாளராக யார் அறிவிக்கப்பட வேண்டும் என்று அக்கட்சி நடத்திய சர்வேயில் 73 சதவீதம் பேர் இசுடான் கத்விக்கு ஆதரவாக வாக்களித்ததாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. முதல் மந்திரி வேட்பாளரை தேர்வு செய்வதற்காக தொலைபேசி எண்ணை வெளியிட்டு மக்கள் தங்களுக்கு விருப்பமான நபரை போன் செய்து தெரிவிக்கலாம் என்று ஆம் ஆத்மி முன்பு அறிவித்து இருந்தது. இதே முறையைத்தான் பஞ்சாபிலும் ஆம் ஆத்மி பின்பற்றியிருந்தது.
40- வயதான இசுதான் கத்வி , ஆம் ஆத்மி கட்சியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சேர்ந்தார். அரசியலில் குதிப்பதற்கு முன்பாக குஜராத்தில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி தொகுப்பாளராக இசுதான் காத்வி இருந்தார்.