கட்சி கட்டுப்பாட்டை மீறி கருத்து கூறிய 6 பேர் நேரில் விளக்கம்
கட்சி கட்டுப்பாட்டை மீறி கருத்து கூறிய 6 பேர் நேரில் வந்து விளக்கம் அளித்துள்ளதாக பா.ஜனதா கூறியுள்ளது.
பெங்களூரு, ஜூலை.1-
கர்நாடக பா.ஜனதா பொதுச் செயலாளர் என்.ரவிக்குமார் எம்.எல்.சி. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
உழைத்து வருகிறோம்
கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கருத்துக்களை தெரிவித்த ரேணுகாச்சார்யாவுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. அவர் மட்டுமின்றி கட்சிக்கு இக்கட்டு ஏற்படுத்தும் வகையில் கருது்து கூறிய 11 பேருக்கு நோட்டீசு அனுப்பி அழைப்பு விடுத்திருந்தோம். அதில் 5 பேர் வரவில்லை. மற்றவர்கள் இந்த கூட்டத்திற்கு வந்து, விளக்கம் அளித்தனர்.
அவர்கள், கட்சியை வலுப்படுத்த நாங்கள் எப்போதும் உழைத்து வருகிறோம் என்று கூறினர். இனி கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த மாட்டோம் என்றும் அவர்கள் உறுதியளித்தனர். கட்சி சார்பில் ஒருவருக்கு மட்டுமே மட்டுமே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைந்ததை அடுத்து, சிலர் வெளிப்படையாக கருத்து வெளியிட்டுள்ளனர். இது கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
அனைவருக்கும் அறிவுரை
இன்று (நேற்று) நடைபெற்ற கூட்டத்தில் எடியூரப்பா, பிரகலாத் ஜோஷி, மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி, மாநில அமைப்பு பொதுச் செயலாளர் ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை கூற வேண்டாம் என்று அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு என்.ரவிக்குமார் கூறினார்.
கட்சியின் மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் லிங்கராஜு பட்டீல் கூறுகையில், "அனைவரும் கட்சி ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். கட்சியின் விதிகள்படி, மாநில நிர்வாகிகள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டுமே எங்களால் நோட்டீசு அனுப்ப முடியும். அதே நேரத்தில் நாங்கள் எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகள், எம்.பி.க்களை அழைத்து பேசுவோம்" என்றார்.