'ஹனி டிராப்' முறையில் தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.3 லட்சம் பறிப்பு; பெண்கள் உள்பட 6 பேர் கைது
‘ஹனி டிராப்’ முறையில் தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.3 லட்சம் பறித்த பெண்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
பேகூர்:
உல்லாசம் அனுபவிக்க...
மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா பகுதியை சேர்ந்த 39 வயதுடையவர், பெங்களூரு பேகூர் பகுதியில் வசித்து வருகிறார். அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அவர் பெண்களை வீட்டிற்கு அழைத்து உல்லாசம் அனுபவிக்க விரும்பினார். அதற்காக அவர் ஆன்லைனில் இருந்து செல்போன் எண்ணை பெற்றார். அதை தொடர்பு கொண்டு அவர் பேசினார். அப்போது தனக்கு ஒரு பெண் தேவைப்படுவதாக கூறினார்.
அப்போது எதிர்முனையில் பேசிய மர்மநபர், பெண்களின் புகைப்படங்களை அனுப்புவதாக அவர் கூறினார். அதன்படி அவர் சில பெண்களின் புகைப்படங்களையும் அனுப்பி வைத்தார். அதில் ஒரு பெண்ணை, அவர் தேர்வு செய்தார். இதையடுத்து அந்த கும்பல், அவரது வீட்டிற்கு அப்பெண்ணை அழைத்து வந்து விட்டு சென்றனர்.
இதையடுத்து அவர் அந்த பெண்ணை வீட்டிற்குள் அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார். அதை அந்த கும்பல் மறைந்திருந்து வீடியோவாக பதிவு செய்தனர். இதையடுத்து தனியார் நிறுவன ஊழியரிடம், ஆபாச வீடியோக்கள் இருப்பதாகவும், அதை வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால், ரூ.10 லட்சம் தருமாறும் கேட்டு ஹனி டிராப் முறையில் மிரட்டி உள்ளனர். முதலில் மறுப்பு தெரிவித்த அவர், மர்மநபர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.3 லட்சத்தை அனுப்பி வைத்தார்.
6 பேர் கைது
எனினும், அந்த கும்பல் அவரை தொடர்ந்து தொல்லை செய்து வந்தது. இந்த நிலையில் அந்த கும்பல் மீண்டும் வீடியோவை காண்பித்து கூடுதலாக பணம் கேட்டுள்ளது. இதையடுத்து அவர், பேகூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் 2 பெண்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அனில் குமார், கிரிஷ், சிவசங்கர், ராமமூர்த்தி உள்பட 6 பேர் என்பதும், அவர்கள்தான் தனியார் நிறுவன ஊழியரை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்டதும் தெரிந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.