சொத்துக்காக விவசாயி அடித்து கொலை; உடல் நலக்குறைவால் இறந்ததாக நாடகமாடிய மனைவி கைது


சொத்துக்காக விவசாயி அடித்து கொலை; உடல் நலக்குறைவால் இறந்ததாக நாடகமாடிய மனைவி கைது
x

சித்ரதுர்கா அருகே சொத்துக்காக விவசாயியை அடித்து கொன்று உடல்நலக்குறைவால் இறந்ததாக நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டார்.

சிக்கமகளூரு;

சொத்துக்காக...

சித்ரதுர்கா டவுன் கெலகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஸ். விவசாயி. இவரது மனைவி நேத்ராவதி (வயது 28). இவர்கள் 2 பேருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அதன்படி தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்்த நிலையில் ஜெகதீஸ் கடந்த 6 மாதங்களாக திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு வீட்டில் படுத்த, படுக்கையாக இருந்துள்ளார்.

நேத்ராவதி, ஜெகதீசை கவனித்துகொண்டு பிள்ளைகளையும் வளர்த்து வந்துள்ளார். இதற்கிடையே ஜெகதீசிற்கு சொந்தமாக அதேப்பகுதியில் 2 ஏக்கரில் நிலம் உள்ளது. இந்த நிலத்தை கணவர் வேறுயாரேனுக்கும் விற்றுவிடுவார் என்ற பயத்தில் நேத்ராவதி அபகரிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக கணவர் என்றும் பாராமல் ஜெகதீசை கொல்ல திட்டமிட்டுள்ளார்.

விவசாயி அடித்து கொலை

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை வீட்டில் படுத்து இருந்த ஜெகதீசை, மனைவி நேத்ராவதி அவரது வாயில் துணியை கட்டி பின்னர் பிறப்பு உறுப்பில் உருட்டு கட்டையால் அடித்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த ஜெகதீஸ் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து நேத்ராவதி, அக்கம் பக்கத்தினரிடம் தனது கணவர் ஜெகதீஸ் உடல்நலக்குறைவால் இறந்து விட்டதாக கூறி நாடகமாடியுள்ளார். இதையறிந்த ஜெகதீசின் அண்ணன் மகேஷப்பா படாவனே போலீசில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில் எனது தம்பியின் இறப்பில் அவரது மனைவி நேத்ராவதி மீது சந்தேகம் இருப்பதாகவும், அவர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

மனைவி கைது

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேத்ராவதியிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர், போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் அவர், போலீசிடம் சொத்தை அபகரிக்க கணவர் ஜெகதீசை அடித்து கொன்றுவிட்டு உடல்நலக்குறைவால் இறந்ததாக நாடகமாடியதை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து அவரை, போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே கொலையான ஜெகதீசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story