பெலகாவியில் தக்காளி திருடனை கையும், களவுமாக பிடித்த விவசாயி
தோட்டத்தில் தக்காளியை திருடிய நபரை விவசாயி கையும், களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தார். அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெலகாவி:-
தக்காளி விலை உயர்வு
நாடு முழுவதும் தக்காளி விலை உயர்ந்து வருகிறது. கர்நாடகத்திலும் தக்காளி விலை அதிகரித்து வருகிறது. கோலாரில் தக்காளி கிலோவுக்கு ரூ.250-க்கும், சிக்கமகளூருவில் ரூ.200-க்கும், பெங்களூருவில் ரூ.160-க்கும் விற்பனை ஆகிறது. தொடர்ந்து தக்காளி விலை அதிகரித்து வருவதால், திருட்டு ஆசாமிகள் தக்காளியை திருடி விற்றுவருகிறார்கள்.
இதனால் திருட்டை தடுக்க விவசாயிகள் தோட்டங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளனர். மேலும் இரவு-பகலாக தக்காளி தோட்டத்தில் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், தோட்டத்தில் தக்காளியை திருட முயன்ற நபரை விவசாயி ஒருவர் கையும், களவுமாக பிடித்த சம்பவம் கர்நாடகத்தில் நடந்துள்ளது. அதன்விவரம் பின்வருமாறு:-
தக்காளி திருடன் சிக்கினான்
பெலகாவி மாவட்டம் ராய்பாக் தாலுகா யாழ்பரட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமார் அழகவுண்டா. விவசாயி. இவர் தனது தோட்டத்தில் தக்காளி சாகுபடி செய்துள்ளார். இந்த நிலையில் இவரது தோட்டத்தில் மர்மநபர்கள் கடந்த ஒரே மாதத்தில் 2 முறை தக்காளியை திருடிச் சென்று இருந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த குமார், தக்காளியை திருடும் ஆசாமிகளை பிடிக்க கண்கொத்தி பாம்பாக தோட்டத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுட்டு வந்தார்.
இந்த நிலையில், நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் குமாரின் தோட்டத்திற்குள் மர்மநபர் ஒருவர் நுழைந்து, தக்காளி செடியில் இருந்து தக்காளியை பறித்துக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அங்கு வந்த குமார், தக்காளி திருடனை கையும், களவுமாக பிடித்தார். பின்னர் பிடிபட்ட நபரை அவர் ஹருகேரி போலீசில் ஒப்படைத்தார். அந்த தக்காளி திருடனை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
பரபரப்பு
விசாரணையில், தக்காளி திருடியவர் யாழ்பரட்டி அருகே உள்ள சித்தாபூர் கிராமத்தை சேர்ந்த புஜப்பா கனிகேரா என்பதும், அவர் ஏற்கனவே 2 முறை குமார் தோட்டத்தில் தக்காளியை திருடியதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தக்காளி திருடனை கையும், களவுமாக விவசாயி பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.