காட்டெருமை தாக்கி விவசாயி சாவு


காட்டெருமை தாக்கி விவசாயி சாவு
x
தினத்தந்தி 30 Dec 2022 12:15 AM IST (Updated: 30 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கொப்பா அருகே காட்டெருமை தாக்கி விவசாயி உயிரிழந்தார். இதனால் அந்தப்பகுதி மக்கள் வனத்துறையினரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிக்கமகளூரு:

விவசாயி சாவு

சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா தாலுகா ஜெயப்புராவை சேர்ந்தவர் சோம சங்கர். விவசாயி. இவருக்கு சொந்தமாக கலசா அருகே குலஹித்தலு கிராமத்தில் பாக்கு தோட்டம் அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலை சோமசங்கர் தனது பாக்கு தோட்டத்துக்கு சென்றார். அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டெருமை ஒன்று, அவரது பாக்கு தோட்டத்துக்குள் புகுந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சோமசங்கர், அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். ஆனாலும் காட்டெருமை அவரை முட்டி தூக்கி வீசி தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த அந்தப்பகுதி மக்கள் காட்டெருமையை அங்கிருந்து விரட்டியடித்தனர்.

போராட்டம்

இதுபற்றிய தகவல் அறிந்ததும் வனத்துறையினரும், கலசா போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது அந்தப்பகுதி மக்கள் வனத்துறையினரை முற்றுகையிட்டு திடீரென போராட்டம் நடத்தினா். அப்போது அவர்கள், தங்கள் கிராமத்தில் காட்டெருமை அட்டகாசம் அதிகமாக உள்ளது. அதனை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது காட்டெருமை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் நாங்கள் பீதியில் உள்ளோம். காட்டெருமைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டும். உயிரிழந்த விவசாயியின் குடும்பத்துக்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதனை ஏற்ற வனத்துறையினர், காட்டெருமை தாக்கி உயிரிழந்த சோம சங்கரின் குடும்பத்துக்கு தக்க நிவாரணம் வழங்கப்படும் என்றும், காட்டெருமை அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர். இதையடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

போலீஸ் விசாரணை

இதையடுத்து போலீசார் சோமசங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கலசா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story