கரடி தாக்கி விவசாயி பலி
சாம்ராஜ்நகரில் கரடி தாக்கி விவசாயி பலியானார்.
கொள்ளேகால்:-
விவசாயி
சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் பிளிகிரிரங்கணபெட்டா வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் சிறுத்தை, புலி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகமாக வசித்து வருகின்றன. சாம்ராஜ்நகர் மாவட்டம் புனஜனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பத்ரப்பா என்பவரின் மகன் ராஜு(வயது 55). இந்த கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. விவசாயியான ராஜு நேற்று காலையில் தனக்கு சொந்தமான கால்நடைகளை மேய்ச்சலுக்காக கிராமத்தையொட்டிய வனப்பகுதிக்குள் அழைத்துச் சென்றார்.
அப்போது அங்கு வந்த கரடி, ராஜு மீது பாய்ந்து தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த ராஜு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதையடுத்து அந்த கரடி வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது. இதைப்பார்த்த அந்த வழியாக வந்த கிராம மக்கள் சிலர், இதுபற்றி ராஜுவின் குடும்பத்தினருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
கிராம மக்கள் பீதி
தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து ராஜுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் ராஜுவின் குடும்பத்திற்கு அரசிடம் இருந்து நிவாரண நிதி கிடைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.