குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என அச்சம்: எகட்டி அணையில், சிக்கமகளூரு நகரசபை தலைவர் ஆய்வு


குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என அச்சம்: எகட்டி அணையில், சிக்கமகளூரு நகரசபை தலைவர் ஆய்வு
x
தினத்தந்தி 17 Jun 2023 12:15 AM IST (Updated: 17 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிக்கமகளூருவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என அச்சம் எழுந்ததால் எகட்டி அணையில் சிக்கமகளூரு நகரசபை தலைவர் வேணுகோபால் ஆய்வு மேற்கொண்டார்.

சிக்கமகளூரு-

சிக்கமகளூருவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என அச்சம் எழுந்ததால் எகட்டி அணையில் சிக்கமகளூரு நகரசபை தலைவர் வேணுகோபால் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறுகையில், இன்னும் 2 ஆண்டுகளுக்கு போதுமான அளவு தண்ணீர் இருப்பதாக தெரிவித்தார்.

குடிநீர் தட்டுப்பாடு

சிக்கமகளூரு நகரசபை தலைவராக இருந்து வருபவர் வேணுகோபால். இவர் நேற்றுமுன்தினம் காலையில் நகரசபை கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகளுடன் சிக்கமகளூரு அருகே ஹிரேகொலலே பகுதியில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு மையத்திற்கு சென்றார். அங்கு குடிநீர் சுத்திகரிப்பு மையத்தையும், குளத்தையும் அவரும், நகரசபை கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகளும் பார்வையிட்டனர்.

அதையடுத்து இந்தாவரா கிராமத்தில் உள்ள குப்பை கிடங்கிற்கு சென்று அவர் பார்வையிட்டார். அதன்பின்னர் ஹாசன் மாவட்டம் பேளூருக்கு சென்று எகட்டி அணையை பார்வையிட்டார். சிக்கமகளூருவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்று அச்சம் எழுந்ததால், நகரசபை தலைவர் வேணுகோபால் இந்த ஆய்வை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. எகட்டி அணையை பார்வையிட்ட வேணுகோபால் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இன்னும் 2 ஆண்டுகளுக்கு...

சிக்கமகளூரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்னும் தென்மேற்கு பருவமழை தொடங்கவில்லை. இதனால் சிக்கமகளூருவுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது. அதன்காரணமாக ஹிரேகொலலே குளம் மற்றும் எகட்டி அணையில் ஆய்வு மேற்கொண்டு தண்ணீர் இருப்பு குறித்து விவரங்களை கேட்டறிந்தேன். தற்போது இருக்கும் தண்ணீர் இருப்பை கொண்டு இன்னும் 2 ஆண்டுகளுக்கு மக்களுக்கு குடிநீர் வழங்க முடியும்.

அந்த அளவிற்கு தண்ணீர் இருப்பு உள்ளது. அதனால் சிக்கமகளூருவில் குடிநீர் பிரச்சினை ஏற்படாது. அதேபோல் குப்பை கிடங்குகளில் குப்பை கழிவுகளை தரம் பிரித்து உரமாக தயாரிக்கவும், அவற்றை விவசாயத்திற்கும் பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தேவையான அளவு தண்ணீர்...

இதுதவிர சிக்கமகளூரு நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையங்கள் அமைக்கும் பணி 90 சதவீதம் முடிந்துள்ளது. மீதமுள்ள 10 சதவீத பணியும் விரைவில் நடைபெறும். மேலும் சிக்கமகளூரு நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் வீணாகாமல் தடுக்கவும், மக்களுக்கு தேவையான அளவு தண்ணீரை வினியோகம் செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story