தாயை கழுத்தை நெரித்து கொன்ற பெண் பிசியோதெரபிஸ்ட் கைது
பெங்களூருவில் குடும்ப தகராறில் தாயை கழுத்தை நெரித்து கொன்ற பெண் பிசியோதெரபிஸ்ட், தாய் உடலை டிராலி பையில் வைத்துக்போலீஸ் நிலையம் சென்று சரண் அடைந்தார்.
மைகோ லே-அவுட்-
பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் பின்வருமாறு:-
பிசியோதெரபிஸ்ட்
மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் சொனாலி சென் (வயது 39). பிசியோதெரபிஸ்ட் ஆக இருந்து வருகிறார். இவரது தாய் பிபாபால் (60) ஆவார். இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்துள்ளார். இதற்கிடையே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அவரது தந்தை உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
இதையடுத்து அவர் தனது தாய், கணவர், மாமியார், குழந்தைகளுடன் பெங்களூருவில் குடியேறினார். அவரது கணவர், ஹெப்பகோடி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்கள் மைகோ லே-அவுட் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.
கழுத்தை நெரித்து தாய் கொலை
கடந்த சில ஆண்டுகளாக, உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள அவரது தாய்க்கும், மாமியாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சொனாலி சென், மனஉளைச்சலில் இருந்து வந்தார். அதுபோல் நேற்று முன்தினமும் சொனாலி சென்னின் தாய்க்கும், மாமியாருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால் கோபத்தின் உச்சத்துக்கு சென்ற சொனாலி சென், தாய் உயிருடன் இருந்தால் நிம்மதியாக வாழ முடியாது என கருதி அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். உடனே ஒரு அறையில் படுத்திருந்த தாய் பிபாபாலின் கழுத்தை கைகளால் நெரித்தார். இதில் பிபாபால் மூச்சுத்திணறி செத்தார்.
போலீசில் சரண்
இந்த சம்பவம் நடந்த சமயத்திலேயே மற்றொரு அறையில் சொனாலி சென்னின் மாமியார், குழந்தை இருந்ததாக தெரிகிறது. ஆனால் அவர்களுக்கு இந்த படுபாதக செயல் பற்றி தெரிந்துவிடாமல் கனகச்சிதமாக தாயை தீர்த்துக்கட்டிய சொனாலி சென், ஒரு டிராலி பையில் தாயின் உடலை திணித்து வைத்தார். பின்னர் அவர் அந்த டிராலி பையுடன் அருகில் உள்ள மைகோ லே-அவுட் போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கிருந்த போலீசாரிடம், நடந்த சம்பவத்தை கூறி சரண் அடைந்தார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், டிராலி பையை திறந்து பார்த்தனர். அதில் பிபாபாலின் உடல் இருந்தது. இதையடுத்து உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
பரபரப்பு தகவல்கள்
மேலும் தாயை கொன்ற சொனாலி சென்னை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது பரபரப்பு தகவல்கள் தெரியவந்தது.அதாவது, சொனாலி சென்னின் தாய் பல ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்து வந்துள்ளார். இதனால் சொனாலி சென் திருமணத்திற்கு பின்பும் கணவர், மாமியார், தாய், குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். பிபாபால் படுத்த படுக்கையாக இருந்ததால் அவருக்கும், சொனாலி சென்னின் மாமியாருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு தகராறுஉண்டாகி வந்துள்ளது. அந்த சமயத்தில் பிபாபால் குறித்து, அவரது மாமியார் தகாத வார்த்தைகளால் பேசி வந்ததாக கூறப்படுகிறது.
மன உளைச்சல்
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சொனாலி சென், தனது தாயை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி அவர் தனது தாயை கழுத்தை நெரித்து கொன்றதும், பின்னர், உடலுடன் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்ததும் தெரிந்தது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து தென்கிழக்கு மண்டல உதவி போலீஸ் கமிஷனர் சி.கே.பாபு நிருபர்களிடம் கூறுகையில், "சொனாலி சென் ஒரு பிசியோதெரபிஸ்ட் ஆவார். ஆனால் தாய்-மாமியார் இடையேயான தகராறால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனால் தாயை கழுத்தை நெரித்து கொலை செய்யும் அளவுக்கு சென்றுள்ளார்.
சொனாலி சென், அவரது பெற்றோருக்கு ஒரே மகள் ஆவார். கணவர் வேலைக்கு சென்ற சமயத்தில், தனது தாயை கழுத்தை நெரித்து அவர் கொன்றுள்ளார். இதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றார்.இந்த கொலை சம்பவம் பெங்களூரு வாசிகள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.