ஜனதாதளம் (எஸ்) கட்சியை சிலர் குறைத்து மதிப்பிடுகிறார்கள்
ஜனதாதளம் (எஸ்) கட்சியை சிலர் குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்று குமாரசாமி கூறினார்.
பெங்களூரு:-
10 லட்சம் பேர்
பெங்களூருவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி முன்னிலையில் பிற கட்சி நிர்பவாகிகள் பலர் ஜனதா தளம் (எஸ்) கட்சியில் சேர்ந்தனர். இதில் குமாரசாமி பேசியதாவது:-
கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி நான் 70 தொகுதிகளில் பஞ்சரத்னா யாத்திரையை நடத்தி முடித்துள்ளேன். இந்த யாத்திரைக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கடைசி கட்டத்தில் பஞ்சரத்னா யாத்திரை நிறைவு நிகழ்ச்சியை மைசூரு அல்லது ஹாசனில் நடத்த திட்டமிட்டுள்ளேன். இதில் குறைந்தது 10 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள்.
கலைத்துவிடுவேன்
உத்தரகன்னடா மாவட்டத்தில் குறைந்தது 4 தொகுதிகளில் நமது கட்சி வெற்றி பெறும். ஜனதா தளம் (எஸ்) ஆட்சிக்கு வராவிட்டால் கட்சியை கலைத்துவிடுவேன் என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறிக்கொண்டு சுற்றுகிறார். எங்கள் கட்சி சொந்த பலத்தில் ஆட்சிக்கு வந்து பஞ்சரத்னா திட்டங்களை அமல்படுத்தாவிட்டால் கட்சியை கலைப்பேன் என்று கூறி வருகிறேன். இது அவருக்கு புரியவில்லை.
ஜனதா தளம் (எஸ்) கட்சியை சிலர் குறைத்து மதிப்பிடுகிறார்கள். அவர்களுக்கு தேர்தலில் உரிய பதில் கிடைக்கும். இந்த முறை தேசிய கட்சிகளை மக்கள் ஒதுக்குவார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பஞ்சரத்னா திட்டங்களை அமல்படுத்தியே தீருவோம். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். நாளை (இன்று) செல்போனில் காணொலி மூலம் கட்சி தொண்டர்கள் ஒரு லட்சம் பேருடன் கலந்துரையாட உள்ளேன். கர்நாடக அரசியலில் இது ஒரு முதல் முயற்சி ஆகும். இவ்வாறு குமாரசாமி பேசினார்.