அரசியலில் ஜொலிக்க போகும் திரைநட்சத்திரங்கள்


அரசியலில் ஜொலிக்க போகும் திரைநட்சத்திரங்கள்
x

திரைநட்சத்திரங்கள் அரசியல் களத்தில் கால்பதிக்க வேண்டும் என்ற ஆசையில் பல திரைநட்சத்திரங்கள் உள்ளனர். ஏற்கனவே தமிழகத்தை பொறுத்தவரை கதை, திரைக்கதை, வசனம் எழுதிய மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, நடிகராக மக்கள் மத்தியில் ஜொலித்த அ.தி.மு.க.வை தோற்றுவித்த முன்னாள் முதல்-மந்திரி எம்.ஜி.ஆர்., நடிகையாக இருந்து முதல்-அமைச்சரான ஜெயலலிதா, ஆந்திராவில் முன்னணி நடிகராக இருந்த என்.டி.ஆர். இப்படி பலரும் திரைத்துறையில் அரசியலில் ஜொலித்துள்ளனர்.

இன்றளவும் பல முன்னணி நடிகர்- நடிகைகள் தங்களது அரசியல் ஆர்வத்தை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்கள். சிலர் அரசியல் கட்சிகளில் இணைத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறார்கள்.

இந்த வகையில் கர்நாடக அரசியலிலும் பல திரை பிரபலங்கள் காலூன்றி உள்ளனர். மறைந்த நடிகர் அம்பரீஷ், காங்கிரஸ் சார்பில் சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.பி., எம்.எல்.ஏ. மற்றும் மத்திய மந்திரியாக இருந்துள்ளார். அவரது வரிசையில் நடிகை தாரா, நடிகர் ஜக்கேஷ், பி.சி.பாட்டீல், குமார்பங்கரப்பா, நடிகை சுருதி ஆகியோர் பா.ஜனதாவில் உள்ளனர். ஜக்கேஷ் எம்.பி. ஆக உள்ளார். குமார் பங்காரப்பா சொரப் எம்.எல்.ஏ.வாக உள்ளார். பி.சி.பட்டீல், விவசாய துறை மந்திரியாக உள்ளார்.

அதுபோல் நடிகைகள் ஜெயமாலா, உமாஸ்ரீ ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் உள்ளனர். எச்.டி.குமாரசாமியின் மகனும், நடிகருமான நிகில் குமாரசாமி ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் ராமநகரில் போட்டியிடுகிறார். இதே கட்சியில் நடிகை பூஜா காந்தி உள்ளார்.

மேலும் மறைந்த நடிகர் அம்பரீசின் மனைவியும், நடிகையுமான சுமலதா மண்டியா தொகுதி சுயேச்சை எம்.பி.யாக உள்ளார். இவர் தற்போது பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவரது மகன் அபிஷேக் நடிகராக உள்ளார்.

அதுபோல் பிரபல நடிகையான திவ்யா ஸ்பந்தனா என்கிற ரம்யா காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.பி.யாக இருந்தார். அதன் பின்னர் அரசியலிலும், திரையுலகிலும் இருந்து விலகி இருந்தார். தற்போது படத் தயாரிப்பில் களமிறங்கியுள்ளார்.

இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர்

தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன.

பிரபல நடிகரான அனந்த நாக் பா.ஜனதாவில் சேரப்போவதாக கூறப்படுகிறது. இதுபற்றி பா.ஜனதா தொண்டர்களும் கருத்துக்களை பகிர்ந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் ஆனந்த் நாக் அக்கட்சியில் சேரும் முடிவில் இருந்து பின்வாங்கினார். அதற்கான காரணம் தெரியவில்லை. இந்த நிலையில் மறைந்த கன்னட இளம்நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவியும், நடிகையுமான மேக்னாராஜ் பா.ஜனதாவில் சேர உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு மேக்னாராஜ் குடும்பத்தினர் பச்சைக்கொடி காட்டிவிட்டனர். ஆனால் சர்ஜா குடும்பத்தினர் இதுவரை பதில் அளிக்கவில்லை எனவும் தகவல்கள் கூறுகின்றன.

இதற்கிடையே அரசியலில் ஒதுங்கியிருக்கும் நடிகை ரம்யாவை இந்த தேர்தலில் வேட்பாளராக களமிறக்க காங்கிரஸ் கட்சி தீவிரமாக ஆலோசித்து வருகிறது. அதாவது பத்மநாபநகர் தொகுதியில் மந்திரி ஆர்.அசோக் அல்லது சென்னப்பட்டனா தொகுதியில் எச்.டி.குமாரசாமிக்கு எதிராகவோ அல்லது மண்டியா தொகுதியில் நிறுத்தவோ அக்கட்சி திட்டமிட்டுள்ளது.

தான் அரசியலில் இருக்கும் வரை தனது மகன் அபிஷேக் அரசியலுக்கு வரமாட்டார் என நடிகை சுமலதா எம்.பி. அறிவித்துள்ளார். இருப்பினும் மண்டியா அல்லது மத்தூரில் அபிஷேக் பா.ஜனதா சார்பில் போட்டியிட இருப்பதாக ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள். அதுபோல் கன்னட திரைப்பட தயாரிப்பாளர் கே.மஞ்சு பத்மநாபநகர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளார்.

மேலும் நடிகர் டென்னிஸ் கிருஷ்ணா, இயக்குனர் ஸ்மைல்ஸ்ரீனு, நடிகர் முக்கிய மந்திரி சந்துரு ஆகியோரும் ஆம்ஆத்மி கட்சியில் இணைந்துள்ளனர். இதில் டென்னிஸ் கிருஷ்ணா துருவகெரே தொகுதியிலும், ஸ்மைல் ஸ்ரீனு கூட்லகி தொகுதியிலும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

திரையுலகில் மின்னிய திரைநட்சத்திரங்கள் அரசியலில் ஜொலிக்க போகிறார்களா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.


Next Story