திருடனை பிடித்துக்கொடுத்தவர்கள் மீது வழக்குப்பதிவு - அதிர்ச்சி சம்பவம்


திருடனை பிடித்துக்கொடுத்தவர்கள் மீது வழக்குப்பதிவு - அதிர்ச்சி சம்பவம்
x

திருடனை பிடித்துக்கொடுத்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பெருமாள்குளத்தை சேர்ந்த ஜெயந்தி என்பவரின் 11 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு செல்வமுருகன் என்ற திருடன் தப்பியோட முயற்சித்தான்.

அப்போது, அப்பகுதி மக்கள் ஒன்றுதிரண்டு திருடன் செல்வமுருகனை துரத்தி பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். இதில், திருடனுக்கு காயங்கள் ஏற்பட பொதுமக்களே மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இது தொடர்பாக புகாரின் பெயரில் திருடன் செல்வமுருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் செல்வமுருகன் வேம்பார் பகுதியை சேர்ந்தவர் என்பதும் அவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருடன் செல்வமுருகன் உடல்நலம் தேரியதையடுத்து போலீசார் அவரை திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

அப்போது, திருடன் செல்வமுருகன் நீதிபதியிடம் பொதுமக்கள் தன்னை அடித்து காயப்படுத்தியதாக கூறினார். இதையடுத்து, தாக்குதல் நடத்திய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்பெயரில் சாத்தான்குளம் போலீசார் பெருமாள்குளத்தை சேர்ந்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருடனை பிடித்து தாக்கியதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் ஊர் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பெருமாள்குளத்தை சேர்ந்த நபர், திருட்டில் ஈடுபட்டவரை பிடித்த நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் நாளை இதுபோன்ற திருட்டு சம்பவம் ஒன்று நடக்கும்போது பொதுமக்கள் ஆதரவுக்கு செல்வார்களா? இவ்வாறு வழக்குப்பதிவு செய்யப்பட்டால் திருட்டு சம்பவங்கள் சுலபமாக நடைபெற்றுவிடும். இது ஊர் மக்களின் கருத்து. ஆகையால், இந்த வழக்கை சரியானபடி விசாரித்து 8 பேர் மீது பதியப்பட்டுள்ள வழக்கை தள்ளுபடி செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்' என்றார்.




Next Story