முன்விரோதத்தில் ஸ்ரீராமசேனை தலைவர் மீது துப்பாக்கி சூடு; 3 பேர் கைது
முன்விரோதத்தில் பெலகாவி மாவட்ட ஸ்ரீராமசேனை அமைப்பின் தலைவரை துப்பாக்கியால் சுட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பெலகாவி:
துப்பாக்கி சூடு
பெலகாவி மாவட்ட ஸ்ரீராமசேனை அமைப்பின் தலைவராக பணியாற்றி வருபவர் ரவிக்குமார் கோட்டிகர். இவர் நேற்று முன்தினம் இரவு தனது காரில் பெலகாவியில் இருந்து ஹிண்டல்கா நோக்கி சென்று கொண்டு இருந்தார். காரை டிரைவரான மனோஜ் என்பவர் ஓட்டி சென்றார். ஹிண்டல்கா அருகே சென்றபோது சாலையில் அமைக்கப்பட்டு இருந்த வேகத்தடையில் கார் ஏறி, இறங்கியது.
இந்த சந்தர்ப்பத்தில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் கார் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் ரவிக்குமாரின் கழுத்தில் குண்டு துளைத்தது. கார் டிரைவர் கையில் காயம் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் பெலகாவி புறநகர் போலீசார் அங்கு விரைந்து சென்று ரவிக்குமார், மனோஜை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
3 பேர் கைது
இதுபற்றி அறிந்ததும் ஸ்ரீராமசேனை அமைப்பின் மாநில தலைவர் பிரமோத் முத்தாலிக் ஆஸ்பத்திரிக்கு சென்று ரவிக்குமாரிடம் உடல்நலம் விசாரித்தார். பின்னர் இத்தகைய தாக்குதல்களுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். ரவிக்குமாரை துப்பாக்கியால் சுட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். இந்த நிலையில் ரவிக்குமார் மீது துப்பாக்கியால் சுட்டதாக 3 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். விசாரணையில் முன்விரோதம் காரணமாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து பெலகாவி நகர போலீஸ் கமிஷனர் போரலிங்கய்யா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்து உள்ள ஸ்ரீராமசேனை அமைப்பின் பெலகாவி மாவட்ட தலைவர் ரவிக்குமாருக்கும், ரவி என்பவருக்கும் இடையே ரியல் எஸ்டேட் தொழில், பணத்தகராறில் பிரச்சினை இருந்து வந்து உள்ளது. இந்த விவகாரத்தில் ரவி மீதும், அவரது ஆதரவாளரான அபிஜித் மீதும் தாக்குதல் நடந்து இருந்தது.
இதனால் ரவிக்குமாரை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில் அவர் மீது அபிஜித், ராகுல், ஜோதி கங்காரா ஆகியோர் துப்பாக்கியால் சுட்டது தெரியவந்து உள்ளது. ரவிக்குமாரை நோக்கி அபிஜித் தான் நாட்டு துப்பாக்கியால் சுட்டு உள்ளார். அவர் பயன்படுத்திய துப்பாக்கிக்கு உரிமம் இல்லாததும் தற்போது தெரியவந்து உள்ளது. கைதான 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இந்த சம்பவத்தில் யாரும் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.