முதல்-மந்திரியின் ஒரு லட்சம் வீடுகள் கட்டும் திட்டத்தில் முதல்கட்டமாக 1,000 வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கிய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை
முதல்-மந்திரியின் ஒரு லட்சம் வீடுகள் கட்டும் திட்டத்தில் முதல்கட்டமாக எலகங்காவில் 1,000 வீடுகளை பயனாளிகளுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வழங்கினார்.
பெங்களூரு:
சாமானிய மக்கள்
முதல்-மந்திரியின் ஒரு லட்சம் வீடுகள் கட்டும் திட்டத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படுகின்றன. முதல்கட்டமாக எலகங்கா அக்ரஹாரபாளையத்தில் 1,000 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளை தகுதியான பயனாளிகளுக்கு வழங்கும் விழா நேற்று எலகங்காவில் நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வீடுகளின் சாவியை வழங்கி பேசியதாவது:-
கர்நாடகத்தில் வரும் நாட்களில் வீடுகள் கட்டுவது கடினமானதாக மாறும். நில வருவாய் சட்டத்தில் வீடுகள் கட்ட விலக்கு அளிக்கப்படவில்லை. தேவை அதிகரித்துள்ளதால் நிலத்தின் மதிப்பு அதிகரித்து வருகிறது. நமது சட்டங்களால் சாமானிய மக்களால் வீடுகள் நிலையில் இல்லை. அதனால் சாமானிய மக்கள் வீடுகள் கட்டும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்படும். நிபந்தனைகள் நீக்கப்பட்டு, குறைந்த விலையில் சாமானிய மக்களுக்கு வீடுகள் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
முற்போக்கு சிந்தனை
வீட்டு வசதித்துறை மந்திரியாக சோமண்ணா வந்த பிறகு 3 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு ஏழை மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முற்போக்கு சிந்தனையுடன் செயல்படும்போது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். நாங்கள் பிரச்சினைகளை தீர்க்காமல் இருக்க மாட்டோம். தங்கள் குடும்பம் சொந்த வீட்டில் கவுரவத்துடன் வாழ வேண்டும் என்று ஒவ்வொருவரும் ஆசைப்படுகிறார்கள்.
மனிதர்கள் மட்டுமின்றி பறவைகளும் கூடுகள் கட்டி வாழ்கின்றன. பறவைகளுக்கு இருக்கும் இந்த வசதி மனிதர்களுக்கும் கிடைக்க வேண்டும். பெங்களூரு பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. இங்கு ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கும் பணியை அரசு செய்கிறது. அறிவிப்புகள் அதிகளவில் வெளியிடப்படுகின்றன. 6 ஆண்டுகளுக்கு முன்பு 15 லட்சம் வீடுகள் கட்டுவதாக அறிவிப்பு வெளியானது.
கட்டுமான பணிகள்
அதற்கு காங்கிரஸ் அரசு நிதி ஒதுக்காமல் சென்றது. அவற்றுக்கு ரூ.15 ஆயிரம் கோடி தேவைப்பட்டது. ஆனால் வெறும் ரூ.3 ஆயிரம் கோடியை மட்டுமே ஒதுக்கிவிட்டு சென்றனர். நாங்கள் 10 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயித்தோம். இதில் 5 லட்சம் வீடுகளின் கட்டுமான பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. நம்மால் மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்ற உண்மையை சொல்ல வேண்டும்.
மக்களை கனவு உலகில் தள்ளும் முயற்சியை காங்கிரஸ் இப்போதும் செய்கிறது. மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் உள்ளனர். அவர்களை ஏமாற்ற முடியாது என்று காங்கிரஸ் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பொய் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை திசை திருப்ப கூடாது. எல்லா நேரங்களிலும் மக்களை ஏமாற்ற முடியாது. எல்லாவற்றையும் இலவசமாக கொடுக்கிறோம் என்று சொன்னால் மக்கள் அதை நம்ப மாட்டார்கள்.
20 ஆயிரம் வீடுகள்
மக்களின் வரிப்பணத்தை எங்கு பயன்படுத்த வேண்டும் என்பதை யோசிக்க வேண்டும் அடிமட்டத்தில் உள்ள மக்களை முன்னிலைக்கு கொண்டுவரும் திட்டங்களை அமல்படுத்த வேண்டும். நான் முதல்-மந்திரியாக வந்த பிறகு 5 லட்சம் வீடுகளை கட்ட முடிவு செய்தோம். அந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல்-மந்திரியின் ஒரு லட்சம் வீடுகள் கட்டும் திட்டத்தில் தற்போது 20 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் 1,000 வீடுகளை இங்கு அதாவது எலங்காவில் கட்டி முடித்து இன்று பயனாளிகளுக்கு ஒப்படைத்துள்ளோம்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.
இதில் வீட்டு வசதித்துறை மந்திரி சோமண்ணா, எஸ்.ஆர்.விஸ்வநாத் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.