முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஒரு சகுனி; காங். மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா விமர்சனம்
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஒரு சகுனி என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா விமர்சனம் செய்துள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக காங்கிரஸ் மலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சகுனியை போன்றவர். இறுதியில் பாண்டவர்களே வெல்வார்கள். ஊழல் பா.ஜனதா அரசு, இட ஒதுக்கீட்டின் பெயரில் தலித், பழங்குடி, சிறுபான்மையின, பிற்படுத்தப்பட்ட மக்களை ஏமாற்றிவிட்டது. 90 நாட்களில் இட ஒதுக்கீட்டை 3 முறை மாற்றியுள்ளார். மாநிலத்தில் பசவராஜ் பொம்மை 40 சதவீத கமிஷன் மூலம் கொள்ளையடிக்கிறார். இது மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம்.
இவ்வாறு ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கூறினார்.
மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறும்போது, "முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை பறித்து ஒக்கலிகர்கள் மற்றும் லிங்காயத்துகளுக்கு இந்த அரசு வழங்கியுள்ளது. இதை ஏற்கும்படி மடாதிபதிகள் ஜெயமிருதஞ்சய சுவாமி, நிர்மலானந்தநாத சுவாமி ஆகியோரை தொலைபேசியில் பேசி அழுத்தம் கொடுத்துள்ளனர். இது ஒரு வகையான மிரட்டல் போக்கு ஆகும்" என்றார்.
சகுனி குறித்த விமர்சனத்திற்கு பதிலளித்துள்ள பசவராஜ் பொம்மை, "காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர், என்னை சகுனி என்று கூறியுள்ளார். நான் சாமானிய மக்களின் முதல்-மந்திரி என்று அனைவரும் சொல்கிறார்கள். அதனால் அவரது விமர்சனத்தை நான் பொருட்படுத்தவில்லை. அந்த விமர்சனத்திற்கு மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள்" என்றார்.