இந்தியாவில் கால் பதித்ததா குரங்கு அம்மை? கொல்கத்தாவில் அறிகுறிகளுடன் மாணவர் அனுமதி
கொல்கத்தாவில் மாணவர் ஒருவர் குரங்கு அம்மை அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தா,
கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் பல வெளிநாடுகளில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு பரவி வருகிறது. மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் காணப்பட்ட குரங்கு அம்மை நோய் தற்போது ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பரவி உள்ளது.
காய்ச்சல், உடல் வலி, தலை வலி போன்றவை குரங்கு அம்மையின் முதல் அறிகுறிகளாகவும், தொடர்ந்து 3 நாட்களுக்குள் உடல் முழுவதும் சிவப்பு புள்ளிகளும், பின்பு கொப்புளங்களாக மாறும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இந்த நிலையில், கொல்கத்தாவில் இளைஞர் ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஐரோப்பாவில் படித்து வருகிறார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கொல்கத்தாவிற்கு வந்துள்ளார்.அவருக்கு சரும அரிப்பு, கொப்புளங்கள், தோல் தடுப்பு ஆகிய அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகள் இன்னும் வரவில்லை எனவும் அவரை தனிமைப்படுத்தி உடல்நிலையை கண்காணித்து வருவதாகவும் சுகாதார அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.