முதல்கட்டமாக 100 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் விரைவில் அறிவிப்பு; காங்கிரஸ் திட்டம்


முதல்கட்டமாக 100 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் விரைவில் அறிவிப்பு; காங்கிரஸ் திட்டம்
x
தினத்தந்தி 30 Jan 2023 12:15 AM IST (Updated: 30 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி முதல் கட்டமாக 100 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை விரைவில் அறிவிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரு:

தீவிரமாக சுற்றுப்பயணம்

கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆளும் பா.ஜனதா உள்பட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே, பிரசாரம் தொடங்கிவிட்டது போல் தெரிகிறது. பா.ஜனதா தலைவர்கள் விஜயசங்கல்ப யாத்திரையையும், காங்கிரஸ் தலைவர்கள் மக்கள் குரல் யாத்திரையையும், ஜனதா தளம் (எஸ்) தலைவர்கள் பஞ்சரத்னா யாத்திரையும் நடத்தி வருகிறார்கள்.

தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன்னதாகவே ஜனதா தளம் (எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியும் முதல் கட்டமாக 100 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை விரைவில் அறிவிக்க திட்டமிட்டுள்ளது. வருகிற 10-ந் தேதிக்குள் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முதல்கட்ட பட்டியலில், சித்தராமையா, டி.கே.சிவக்குமாருக்கு தலா 50 வேட்பாளர்களை ஒதுக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வேட்பாளர் பட்டியல்

இதுகுறித்து வருகிற 1-ந் தேதி சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோருடன் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா தனித்தனியாக ஆலோசனை நடத்த இருக்கிறார். அவர்கள் இருவரின் ஒப்புதலை பெற்று வேட்பாளர் பட்டியலை வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கூட்டு பயணம் முடிவடைய உள்ள நிலையில் சித்தராமையா வட கர்நாடகத்திலும், டி.கே.சிவக்குமார் தென் கர்நாடகத்தில் தனித்தனியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களின் ஆதரவை பெற உள்ளனர்.


Next Story