கர்நாடக முதல் பெண் சபாநாயகர்
குண்டலுபேட்டை தொகுதி கொடுத்த கர்நாடக முதல் பெண் சபாநாயகர் கே.எஸ்.நாகரத்னம்மா தேர்வானார்.
பெங்களூரு:-
கர்நாடக வரலாற்றில் இதுவரை 2 பெண்கள் மட்டுமே சபாநாயகர்களாக பொறுப்பு வகித்துள்ளனர். கர்நாடக முதல் பெண் சபாநாயகராக கே.எஸ். நாகரத்னம்மா பொறுப்பு ஏற்றார். இவர் சபாநாயகர் பொறுப்பில் ரத்தினமாக ஜொலித்தார் எனலாம். இவர், கர்நாடக சட்டசபையில் கடந்த 1972-ம் ஆண்டில் இருந்து 1978-ம் ஆண்டு வரை சபாநாயகராக செயல்பட்டார். கடந்த 1957-ம் ஆண்டில் சுயேச்சையாக குண்டலுபேட்டையில் களம் கண்டு முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனார். அன்றிலிருந்து 1989-ம் ஆண்டு வரை சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு 7 முறை எம்.எல்.ஏ.வாக தேர்வானார். இந்த காலக்கட்டத்தில் 1978-ம் ஆண்டு தேர்தலில் மட்டும் கே.எஸ்.நாகரத்னம்மா, சுயேச்சை வேட்பாளர் எச்.கே.சிவருத்ரப்பாவிடம் தோல்வி அடைந்தார்.
1957, 1962-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் சுயேச்சையாகவும், 1967, 1972, 1983, 1985 மற்றும் 1989-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டும் அவர் எம்.எல்.ஏ.வாக தேர்வானார். 1989-ம் ஆண்டு எம்.எல்.ஏ.வாக தேர்வான அவருக்கு மந்திரி பொறுப்பு வழங்கப்பட்டது. பின்னர், அவர் 1993-ம் ஆண்டு இயற்கை எய்தினார். இதையடுத்து குண்டலுபேட்டை தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு முன்னாள் மந்திரி எச்.எஸ்.மகாதேவபிரசாத் 5 முறை வெற்றி பெற்று
எம்.எல்.ஏ.வானார். சமீபத்தில் அவர் இறந்ததை தொடர்ந்து குண்டலுபேட்டை தொகுதி இடைத்தேர்தலில் எச்.எஸ்.மகாதேவபிரசாத்தின் மனைவி கீதா மகாதேவபிரசாத் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முதல்-மந்திரி சித்தராமையாவின் மந்திரி சபையில் அவர் கூட்டுறவு மற்றும் சர்க்கரை துறை மந்திரியாக செயல்பட்டு வருகிறார்.
கடந்த 1957-ம் ஆண்டு உருவான குண்டலுபேட்டை தொகுதி இதுவரை சட்டசபை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக பொதுத்தேர்தல், இடைத்தேர்தல் என்று மொத்தம் 14 தேர்தல்களை சந்தித்துள்ளது. இந்த தேர்தல்களின்போது கே.எஸ்.நாகரத்னம்மா 7 முறை, எச்.எஸ்.மகாதேவபிரசாத் 5 முறை, சுயேச்சை வேட்பாளர் எச்.கே.சிவருத்ரப்பா, மகாதேவபிரசாத்தின் மனைவி கீதா மகாதேவபிரசாத் ஆகியோர் தலா ஒரு முறை எம்.எல்.ஏ.வாக தேர்வானது குறிப்பிடத்தக்கது.