நடுக்கடலில் படகு கவிழ்ந்து மீனவர் சாவு


நடுக்கடலில் படகு கவிழ்ந்து மீனவர் சாவு
x
தினத்தந்தி 26 Feb 2023 12:15 AM IST (Updated: 26 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

உடுப்பி அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து மீனவர் உயிரிழந்தார். மற்றொருவர் நீச்சல் அடித்து கரைக்கு வந்தார்.

மங்களூரு:-

படகு கவிழ்ந்தது

உடுப்பி மாவட்டம் எஜமாடி கோடி பகுதியை சேர்ந்தவர் பத்மநாபா (வயது 46). அதே பகுதியை சேர்ந்தவர் தீரேஷ். இவர்கள் இருவரும் மீனவர்கள். இவர்கள் அரபிக்கடலுக்கு படகில் சென்று மீன் பிடிப்பது வழக்கம். 2 பேரும் ஒன்றாகத்தான் சென்று வந்தனர். அதேபோல கடந்த சில நாட்களுக்கு முன்பும் இவர்கள் 2 பேரும் அரபிக்கடலில் மீன்பிடிக்கபடகில் சென்றனர்.

இந்த நிலையில் அவர்கள் 2 பேரும் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது திடீரென்று வந்த ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது. இதனால் அவர்கள் கடலுக்குள் விழுந்து தத்தளித்தனர்.

மீனவர் சாவு

-இதையடுத்து தீரேஷ் நீச்சல் அடித்து கரைக்கு வந்தார். ஆனால் பத்மநாபாவால் நீச்சல் அடிக்க முடியவில்லை. இதனால் அவர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே நீச்சல் அடித்து கரைக்கு வந்த தீரேஷ், இதுபற்றி கடலோர காவல் படையினரிடம் தெரிவித்தார். இதையடுத்து கடலோர காவல் படையினர் நீச்சல் வீரர்களுடன் கடலுக்குள் விரைந்து சென்றனர்.

பின்னர் அங்கு பத்மநாபாவின் உடலை தேடினர். ஆனால் அவரது உடல் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை பத்மநாபாவின் உடல் கரை ஒதுங்கியது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் எஜமாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து எஜமாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story