சத்தீஸ்கரில் உள்ள கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொலை; ஒருவர் தற்கொலை - போலீசார் விசாரணை
சத்தீஸ்கரில் உள்ள கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொலை செய்யப்பட்ட நிலையிலும், ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையிலும் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராய்ப்பூர்,
சத்தீஸ்கர் மாநிலம் சரங்கர்-பிலாய்கர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையிலும், ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையிலும் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக இன்று ராய்ப்பூரில் இருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள சலிஹா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தர்கான் கிராமத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கோடரியால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். அவர்கள் ஹேம்லால் சாஹு (55 வயது), அவரது மனைவி ஜக்மோதி சாஹு (50 வயது), அவர்களது மகள்கள் மீரா சாஹு (30 வயது), மம்தா சாஹு (35 வயது), மற்றும் அவர்களது பேரன் ஆயுஷ் (5 வயது) என அடையாளம் காணப்பட்டனர்.
மேலும், அதே கிராமத்தை சேர்ந்த மனோஜ் சாஹு என்பவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்த நிலையில் இது தொடர்பாக அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்தில் இருந்த ஆதாரங்களை வைத்து பார்க்கும்போது, மனோஜ் சாஹு அவர்கள் 5 பேரையும் கோடரியால் வெட்டிக் கொன்றுவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று எஸ்.பி. தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.