ஒன்னாளி அருகே கோவில் பூசாரி கொலையில், நண்பர்கள் உள்பட 5 பேர் கைது
ஒன்னாளி அருகே கோவில் பூசாரி கொலை வழக்கில் நண்பர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். முன்விரோதத்தில் கூலிப்படை மூலம் தீர்த்துக்கட்டியது அம்பலமானது.
சிக்கமகளூரு;
கோவில் பூசாரி கொலை
தாவணகெரே மாவட்டம் ஒன்னாளி தாலுகா தொட்டகெரே கிராமத்தை சேர்ந்தவர் குமாரப்பா (வயது 48). இவர் அதே பகுதியில் உள்ள கடுகட்டே பீரலிங்கேஸ்வரர் கோவிலில் பூசாரியாக வேலை பார்த்து வந்தார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற குமாரப்பா, அதன்பிறகு வீட்டுக்கு திரும்பி வரவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் கோவில் அருகே உள்ள வயல்வெளியில் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து ஒன்னாளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
5 பேர் கைது
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் போலீசார் கொலையான குமாரப்பாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து ஒன்னாளி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் குமாரப்பா கொலை தொடர்பாக அவரது நண்பர்கள் உள்பட 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் அளித்த வாக்குமூலம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரிஸ்யந்த் கூறியதாவது:-
முன்விரோதம் காரணமாக...
கோவில் பூசாரி குமாரப்பா கொலை வழக்கு தொடர்பாக தாவணகெரே மாவட்டம் ஹரிஹரா தாலுகா ஹன்டகட்டேவை சேர்ந்த மகேஷ் (வயது 35) கார்த்திக் (29), பரமேஸ்வர் (30), சுனில் (24), ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த தினேஷ் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் மகேஷ், தினேஷ் ஆகியோர் குமாரப்பாவின் நண்பர்கள் ஆவர். இவர்கள் 3 பேரும் இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் மகேஷ், தினேஷ் ஆகிய 2 பேரும் குமாரப்பாவிடம் வாங்கிய ரூ.20 ஆயிரத்தை திரும்ப கொடுக்கவில்லை. இதனால் குமாரப்பாவுக்கும், தினேஷ், மகேசுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முன்விரோதமாக மாறி உள்ளது. இதன்காரணமாக மகேசும், தினேசும் கூலிப்படையை சேர்ந்த கார்த்திக், பரமேஸ்வர், சுனில் ஆகியோர் மூலம் குமாரப்பாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர்.
சிறையில் அடைப்பு
அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடனாக வாங்கிய பணத்தை திரும்ப கொடுப்பதாக கூறி குமாரப்பாவை அழைத்து சென்று கூலிப்படையினர் மூலம் மகேசும், தினேசும் சேர்ந்து அவரை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது.
கைதான 5 பேரும் விசாரணைக்கு பிறகு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.