4-வது மாடியில் இருந்து குதித்து விமான பணிப்பெண் தற்கொலை
பெங்களூருவில் 4-வது மாடியில் இருந்து குதித்து விமான பணிப்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோரமங்களா:-
தற்கொலை
பெங்களூரு கோரமங்களா 8-வது பிளாக்கில் உள்ள ரேணுகா குடியிருப்பில் வசித்து வந்தவர் ககனசக்தி அர்ச்சனா (வயது 28). இவர் விமான பணி பெண்ணாக வேலை பார்த்து வந்தார். இவரும், சாப்ட்வேர் என்ஜினீயர் ஒருவரும் 'லிவ்விங்'கில் (திருமணம் செய்யாமல் கணவன்-மனைவி போல் வாழ்வது) இருந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ககனசக்தி அர்ச்சனாவுக்கும், என்ஜினீயருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ககனசக்தி அர்ச்சனா கோபித்து கொண்டு வெளியே சென்றார். பின்னர் அவர் குடியிருப்பின் 4-வது மாடிக்கு சென்றார். இந்த நிலையில் திடீரென்று அங்கிருந்து கீழே குதித்தார். இதில் ககனசக்தி அர்ச்சனா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த குடியிருப்புவாசிகள், உடனடியாக கோரமங்களா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீஸ் விசாரணை
அதன்பேரில் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணையில், ககனசக்தி அர்ச்சனா, இமாசல பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதும், அவர் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
மேலும் அந்த குடியிருப்பில் சாப்ட்வேர் என்ஜினீயர் ஒருவருடன் திருமணம் செய்யாமல் கணவன்-மனைவி போல வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. சாப்ட்வேர் என்ஜினீயருடன் ஏற்பட்ட தகராறில் ககனசக்தி அர்ச்சனா தற்கொலை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து கோரமங்களா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 4-வது மாடியில் இருந்து குதித்து விமான பணிப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.