குண்டலு ஆற்றில் கரைபுரண்டும் ஓடும் வெள்ளம்
தொடர் மழையால் குண்டலு ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
கொள்ளேகால்:
சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் குண்டலு ஆறு ஓடுகிறது. கடந்த 30 ஆண்டுகளாக குண்டலு ஆற்றில் சரிவர தண்ணீர் இன்றி வறண்டுபோய் இருந்தது. மேலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் அப்பகுதி விவசாயிகள் அவதிப்பட்டனர். இதற்கு குண்டலுபேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போதிய மழை இல்லாததே காரணம். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக குண்டலுபேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்தது. இதனால் குண்டலு ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மேலும் சமீப நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் குண்டலு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் வறண்டு கிடந்த குண்டலு ஆறு மீண்டும் உயிர் பெற்றுள்ளது.
மேலும் பல ஆண்டுகளுக்கு பிறகு குண்டலு ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அதனை காண அங்கு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். மேலும் குண்டலு ஆற்றில் தண்ணீர் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுபற்றி குண்டலுபேட்டை தொகுதி எம்.எல்.ஏ. நிரஞ்சன்குமார் தெரிவித்ததாவது:-
குண்டலுபேட்டை பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளதால் குண்டலு ஆற்றில் தண்ணீர் அதிகரித்துள்ளது. குண்டலு ஆற்றை பாதுகாக்க மக்கள் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். இதுதொடர்பாக விழிப்புணர்வு பிரசாரம் நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.