மராட்டிய கூட்டணி அரசுக்கு திடீர் ஆபத்து: பா.ஜனதா ஆட்சியமைக்க தீவிரம்


மராட்டிய கூட்டணி அரசுக்கு திடீர் ஆபத்து: பா.ஜனதா ஆட்சியமைக்க தீவிரம்
x

மராட்டியத்தில் சிவசேனாவை சேர்ந்த ஒரு பகுதி எம்.எல்.ஏ.க்கள் திடீரென மாயமாகி, அவர்கள் குஜராத் ஓட்டலில் முகாமிட்டு போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

மும்பை,

மராட்டியத்தில் சிவசேனாவை சேர்ந்த ஒரு பகுதி எம்.எல்.ஏ.க்கள் திடீரென மாயமாகி, அவர்கள் குஜராத் ஓட்டலில் முகாமிட்டு போர்க்கொடி தூக்கி உள்ளனர். இதனால் சிவசேனா அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில், ஆட்சியமைக்கும் முயற்சியில் பா.ஜனதா தீவிரம் காட்டி உள்ளது.

288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிட்டன. இதில் 105 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜனதா தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. கூட்டணி கட்சியான சிவசேனா 56 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல்-மந்திரி பதவியில் பங்கு கேட்டு சிவசேனா வற்புறுத்தியது. இதனை பா.ஜனதா ஏற்க மறுத்ததை அடுத்து மராட்டியத்தில் அரசியல் பூகம்பம் ஏற்பட்டது.

அதாவது சிவசேனா கட்சி தனது இந்துத்வா கொள்கைக்கு மாறான காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் கைகோர்த்து 162 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் கூட்டணி ஆட்சியை அமைத்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாகவும், தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும் அதே ஆண்டு நவம்பர் 30-ந்தேதி பதவி ஏற்றனர்.

அந்த நாள் முதல் சிவசேனா கூட்டணி அரசை கவிழ்க்க பா.ஜனதா அடுத்தடுத்த முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அவை பலன் அளிக்கவில்லை.

உத்தவ் தாக்கரே அரசு 2½ ஆண்டுகளை கடந்து ஆட்சி செய்து வரும் நிலையில், சமீபத்தில் நடந்த மாநிலங்களவை தேர்தலிலும், நேற்று முன்தினம் நடந்த மராட்டிய மேல்-சபை தேர்தலிலும் ஆளும் கூட்டணியை மிஞ்சி பா.ஜனதா வெற்றி பெற்றது. பண்டர்பூர் தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றதால், அந்த கட்சியின் பலம் தற்போது 106 ஆக இருக்கும் நிலையில் மேல்-சபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக 134 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப்போட்டனர்.

இது பா.ஜனதாவுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதற்கு மத்தியில் திரைமறைவில் அடுத்தடுத்த அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டன.

நேற்று முன்தினம் மேல்-சபைக்கு நடந்த தேர்தலின் போது மாலை 5 மணி வரை சிவசேனா சட்டமன்ற குழு தலைவரான மந்திரி ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயுடனே இருந்தார். அதன்பிறகு அவரும், சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் சிலரும் திடீரென மாயமானார்கள். அவர்களை சிவசேனா தலைமையால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

மந்திரி ஏக்நாத் ஷிண்டேயுடன் அவர்கள் குஜராத் மாநிலம் சூரத்திற்கு இரவோடு, இரவாக சென்று அங்குள்ள ஓட்டலில் தங்கியது பின்னர் தெரியவந்தது. நேற்று காலை மேலும் சில சிவசேனா எம்.எல்.ஏ.க்களும் சூரத் ஓட்டலுக்கு சென்று அவர்களோடு தங்கினர்.

இந்தநிலையில் ஏக்நாத் ஷிண்டேயுடன் இருக்கும் 22 சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் பெயர் பட்டியல் வெளியானது. இருப்பினும் தங்களது அணியில் 30-க்கும் மேற்பட்ட சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாக அவர்கள் கூறினர்.

அவர்கள் சிவசேனா தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். பா.ஜனதாவுடன் சேர்ந்து கூட்டணி அரசை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக தகவல்கள் வெளியாகின.

இருப்பினும் இதன் பின்னணியில் பா.ஜனதா இருப்பது தெரியவந்தது. நேற்று பிற்பகல் பா.ஜனதாவை சேர்ந்த சஞ்சய் குதே எம்.எல்.ஏ. சூரத் ஓட்டலுக்கு விரைந்தார். பா.ஜனதா முன்னாள் முதல்-மந்திரியும், எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் டெல்லி விரைந்தார்.

சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவுடன் உத்தவ் தாக்கரே அரசை கவிழ்த்து விட்டு ஆட்சி அமைக்க பா.ஜனதா தீவிரம் காட்டி உள்ளது.

ஆட்சியமைக்க தேவையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை திரட்டும் முயற்சியில் பா.ஜனதா ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிவசேனா எம்.எல்.ஏ. ஒருவர் சமீபத்தில் மரணம் அடைந்தார். இதனால் சட்டசபையில் தற்போதைய பலம் 287 ஆக உள்ளது. இதனால் 144 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற்றால் பா.ஜனதாவால் ஆட்சி அமைக்க முடியும். சிறிய கட்சிகள், சுயேச்சைகள் என 26 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பா.ஜனதா ஆட்சியமைக்கும் பட்சத்தில் சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளும் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று கருதப்படுகிறது.

சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதா ஆட்சியமைக்க ஆதரவு அளித்தால், அவர்களது பதவி பறிபோகுமா? என்ற கேள்வி எழுகிறது.

தற்போதைய சூழலில் சிவசேனா அதிருப்தி அணியில் 3-ல் ஒரு பங்கிற்கு மேல் எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால், அவர்களது பதவி பறிபோக வாய்ப்பு இல்லை. இது அந்த கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு சாதகமான சூழலாக அமைந்துள்ளது.

இதற்கிடையே சூரத் ஓட்டலில் தங்கியிருக்கும் தங்களது கட்சி அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேச 2 பேர் தூதுக்குழுவை சிவசேனா அனுப்பியது. மேலும் நேற்று மாலை ஏக்நாத் ஷிண்டேயுடன் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டதாக தகவல்கள் வெளியாகின. உடனே மும்பை திருப்புங்கள், பிரச்சினையை பேசி தீர்த்து கொள்ளலாம் என்று அவர் சமாதானப்படுத்தியதாகவும், ஆனால் அதனை ஏற்க ஏக்நாத் ஷிண்டே மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், ஏக்நாத் ஷிண்டே சிவசேனா நிறுவனர் பால்தாக்கரே குடும்ப விசுவாசி என்பது தான்.

இதற்கிடையே மராட்டிய அரசை கவிழ்க்க பா.ஜனதா சதி செய்வதாக ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் நிறுவன தலைவர் சரத்பவார் குற்றம்சாட்டினார். அதேநேரத்தில் ஆட்சியை கவிழ்க்கும் பா.ஜனதாவின் முயற்சி பலிக்காது என்று சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

ஆனால் தற்போதைய பரபரப்பு திருப்பங்கள் நிறைந்த காட்சிகளால் மராட்டியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


Next Story