முண்டாஜே மலையில் காட்டுத்தீ
பெல்தங்கடி அருகே முண்டாஜே மலையில் காட்டுத்தீ ஏற்பட்டது.
மங்களூரு-
தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா உஜிரே மற்றும் முண்டாஜே ஆகிய 2 இடங்களில் நேற்று முன்தினம் மாலையில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. முண்டாஜே கிராமத்தில் கோடம்பள்ளி அருகே உள்ள பெரிய மலையில் இந்த தீவிபத்து உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு அமைக்கப்பட்டு இருக்கும் டிரான்ஸ்பார்மரில் இருந்து தீப்பொறி உருவாகி, அதன்மூலம் காட்டில் தீப்பிடித்து பரவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த தீவிபத்தால் அங்கு அமைக்கப்பட்டு இருந்த ரப்பர் தோட்டம் கடுமையாக சேதம் அடைந்தது. தீவிபத்து ஏற்பட்டதும் அப்பகுதி மக்கள் திரண்டு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுபோல் உஜிரேவின் நின்னிக்கல்லு பகுதியில் சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் காட்டுத்தீ பரவி எரிந்தது. தீயணைப்பு படையினரும், அப்பகுதி மக்களும் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மேலும் உஜிரேவின் பழைய மார்க்கெட் பகுதியிலும், நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள பழைய தங்கும் விடுதியின் பின்புறத்திலும் தீவிபத்து ஏற்பட்டது. அந்த தீயை தீயணைப்பு படையினர் அணைத்தனர்.
தீவிபத்து காரணமாக முண்டாஜே பகுதியில் தொலைபேசி மற்றும் செல்போன் சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் தீயணைப்பு படையினரை தொடர்பு கொள்ள முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டனர். பின்னர் ஒரு வழியாக பொதுமக்கள், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.