வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் காயம் அடைந்த வனக்காவலர் சிகிச்சை பலனின்றி சாவு
வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி காயம் அடைந்த வனக்காவலர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஹாசன்:-
வனப்பகுதியில் தீ
ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா தாலுகா மாரனஹள்ளி அருகே இத்திகேகூடு கிராமத்தையொட்டி வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இத்திகேகூடு வனப்பகுதியில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ, அங்கிருந்த மரம், செடி-கொடிகளுக்கு பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனை அறிந்ததும் வனத்துறை அதிகாரி மஞ்சுநாத் மற்றும் வனக்காவலர்கள் சுந்தரேஷ், மகேஷ், துங்கேஷ் உள்பட 6 பேர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதில் மஞ்சுநாத், சுந்தரேஷ், துங்கேஷ், மகேஷ் ஆகிய 4 பேரும் தீயில் சிக்கி பலத்த காயம் அடைந்தனர். அவர்கள், காடுமனே ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஹாசன் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
சிகிச்சை பலனின்றி சாவு
அவர்களில் வனத்துறை அதிகாரி மஞ்சுநாத் மற்றும் வனக்காவலர் சுந்தரேஷ் ஆகியோரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருந்ததால் அவர்கள், மேல் சிகிச்சைக்காக தடையில்லா போக்குவரத்து மூலம் ஆம்புலன்சில் பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பெங்களூருவில் உள்ள செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனாலும் சிகிச்சை பலனின்றி வனக்காவலர் சுந்தரேஷ் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். மஞ்சுநாத்துக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அஞ்சலி
சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சுந்தரேஷ், சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்தவர் ஆவார். அவரது உடல் ஹாசனுக்கு கொண்டு வரப்பட்டு அங்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அவரது சொந்த ஊருக்கு சுந்தரேசின் உடல் கொண்டு செல்லப்பட உள்ளது.