தாய்-மகன் கொலையில் கள்ளக்காதலன் கைது
பெங்களூருவில் தாய், மகன் கொலை வழக்கில் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார். வேறொருவருடன் பழகியதால் தீர்த்துக்கட்டியது அம்பலமாகி உள்ளது.
பெங்களூரு:-
தாய்-மகன் கொலை
ஆந்திராவை சேர்ந்தவர் சந்திரா. இவரது மனைவி நவநீதா (வயது 38). இந்த தம்பதியின் மகன்கள் சாய் சுஜன் (8), சாய் அக்ஷய். இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக நவநீதா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சந்திராவை பிரிந்து தனது மகன் சாய் சுஜனுடன் பெங்களூருவுக்கு வந்தார். பெங்களூரு பாகலகுன்டே பகுதியில் தனது மகனுடன் வாடகை வீட்டில் நவநீதா வசித்து வந்தார். மேலும் கால்சென்டரில் நவநீதா வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி இரவு நவநீதா மற்றும் அவரது மகன் சாய் சுஜனை மர்மநபர்கள் படுகொலை ெசய்தனர். இதுகுறித்து பாகலகுன்டே போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்தனர்.
கள்ளக்காதலன் கைது
நவநீதாவை, அவருக்கு நன்கு தெரிந்த நபர்களே கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரது செல்போனை ஆய்வு செய்தபோது கொலை நடந்த தினத்தில் அவர் கடைசியாக ஜாலஹள்ளியை சேர்ந்த சேகர் என்பவருடன் பேசி இருந்தார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, சேகரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது கள்ளக்காதல் விவகாரத்தில் தாய், மகனை கொலை செய்ததை சேகர் ஒப்புக் கொண்டார். உடனே அவரை போலீசார் கைது செய்தார்கள். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.
வேறொருவருடன் பழக்கம்
அதாவது கைதான சேகர் எலெக்ட்ரீசியன் ஆவார். கணவரை பிரிந்து வாழ்ந்த நவநீதாவுக்கும் சேகருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதற்கிடையில், லோகேஷ் என்பவருடன் கடந்த சில மாதங்களாக நவநீதா பழகி வந்துள்ளார். இதுபற்றி சேகருக்கு தெரியவந்துள்ளது. உடனே அவர், லோகேசுடன் பேசுவதை நிறுத்தும்படி கூறி நவநீதாவுடன் சண்டை போட்டு வந்துள்ளார்.
ஆனாலும் லோகேசுடன் பழகுவதை அவர் நிறுத்தாமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சேகர், நவநீதாவை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். கடந்த 5-ந் தேதி இரவு நவநீதா வீட்டுக்கு சேகர் வந்துள்ளார்.
கொலையை பார்த்த சிறுவனை...
அந்த சந்தர்ப்பத்தில் மகன் சாய் சுஜன் இருந்ததால், அவனிடம் பணம் கொடுத்து ஜூஸ் வாங்கி வரும்படி சேகர் கூறியுள்ளார். அப்போது மீண்டும் லோகேசுடன் பழகி வந்த விவகாரம் தொடர்பாக 2 பேருக்கும் இைடயே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சேகர், நவநீதாவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்திருக்கிறார். இதனை கடைக்கு சென்றுவிட்டு திரும்பிய சாய் சுஜன் பார்த்துள்ளான். இந்த கொலையை வெளியே சொல்லி விடுவான் என்று நினைத்து சிறுவனின் கை, கால்களை கட்டியும் தலையணையால் முகத்தை அமுக்கியும் சேகர் கொலை செய்தது தெரியவந்துள்ளது.
அதே நேரத்தில் இந்த இரட்டை கொலையை மறைக்க வீட்டில் இருந்த கியாஸ் அடுப்பை திறந்துவிட்டு விட்டு வெளிப்புறமாக கதவை பூட்டிவிட்டு சேகர் சென்றிருந்தார். ஆனால் கியாஸ் அடுப்பு வெடிக்காமல் இருந்தது தெரியவந்தது. கைதான சேகரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.