முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி குற்றச்சாட்டு
பிரதமர் மோடி கர்நாடக மக்களை ஏமாற்றி வருகிறார் என முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.
மைசூரு:-
சட்டசபை தேர்தல்
கர்நாடக மாநிலத்தில் சட்டசபைக்கு மே தேர்தல் நடைபெற உள்ளது. ஜனதாதளம்(எஸ்) சார்பில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, பஞ்சரத்னா என்ற பெயரில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வந்தார். பஞ்சரத்னா யாத்திரையின் நிறைவு விழா நேற்று முன்தினம் மைசூரு உத்தனஹள்ளியில் பஞ்சரத்னா யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் நடந்து முடிந்தது. இந்தநிலையில் நேற்று மைசூருவில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
மோடி தலைமையிலான மத்திய அரசு அரசியலமைப்பு சாசனத்திற்கு சமாதி கட்டி கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி எதிர்க்கட்சிக்காரர்களை பேசவிடாமல் அவர்கள் மீது வழக்குப் போட்டு கைது செய்து வருகிறார். இது ஜனநாயகத்தின் படுகொலை ஆகும். கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்குவதால் பிரதமர் மோடி அடிக்கடி வந்து செல்கிறார். மேலும் வளர்ச்சி திட்டங்களை அவர் அறிவித்து வருகிறார். கொரோனா காலத்தில் மக்கள் இறந்தபோது பிரதமர் மோடி எங்கே சென்றார். கர்நாடக மக்களை பிரதமர் மோடி ஏமாற்றி வருகிறார். மோடி சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார். சட்டசபை தேர்தல் வருவதால் பொய் பிரசாரங்களை கூறி கர்நாடக மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
கன்னட மக்கள் மீது தாக்குதல்
கன்னட மக்கள் மீது மராட்டியர்கள் தாக்குதல் நடத்திய போது பிரதமர் மோடி எங்கே சென்றார். சட்டசபை தேர்தல் நெருங்குவதால் அடிக்கடி கர்நாடகம் வந்து பிரதமர் மோடி வளர்ச்சி பணிகளை தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா கர்நாடக மக்களுக்காக வராதவர்கள் தற்போது மட்டும் வருகிறார்கள். இரட்டை என்ஜின் அரசு எள்று கூறினால் மட்டும் போதாது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். பா.ஜனதாவினர் கூறுவது எல்லாம் பொய். அவர்கள் செய்த சாதனைகள் ஏதும் இல்லை. நாட்டில் மதக்கலவரம், வன்முறை தூண்டிவிடும், பா.ஜனதா அரசை மாநிலத்தில் இருந்து அகற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.