முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அனைவருக்கும் உந்துசக்தி; நினைவு நாளில் பசவராஜ் பொம்மை புகழாரம்


முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அனைவருக்கும் உந்துசக்தி; நினைவு நாளில் பசவராஜ் பொம்மை புகழாரம்
x

முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அனைவருக்கும் உந்துசக்தியாக திகழ்ந்தார் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை புகழாரம் சூட்டியுள்ளார்.

பெங்களூரு:

மரணத்தில் சந்தேகம்

முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் நினைவு நாளையொட்டி பெங்களூரு விதான சவுதாவில் உள்ள அவரது சிலைக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி மிகவும் மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவராக திகழ்ந்தார். அவர் ரஷியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அந்த நேரத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெற்று இருந்தது. அவரது மரணத்தில் ஏற்பட்ட சந்தேகம் இன்றும் நீடிக்கிறது.

உந்துசக்தியாக திகழ்ந்தார்

ஏழை குடும்பத்தை சேர்ந்த அவர் உயர்ந்த பதவியை அடைந்தபோதும், எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார். அவருக்கு எந்த தாழ்வு மனப்பான்மையும் இருக்கவில்லை. செல்வந்தராக வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருக்கவில்லை. பிரதமர் பதவியில் இருந்தபோது அவர் நல்லாட்சியை வழங்கினார். அவர் காட்டிய பாதையில் நாம் பயணித்து அதன் மூலம் அவருக்கு நாம் உண்மையான அஞ்சலி செலுத்த வேண்டும்.

ஜெய் ஜவான், ஜெய் கிசான் என்ற முழக்கத்தை முன்வைத்தவர் அவரே. இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சி, சுயமரியாதை மற்றும் தன்னிறைவு அடைய அவர் முக்கியத்துவம் அளித்தார். அவர் அனைவருக்கும் முன்மாதிரியாக, உந்துசக்தியாக திகழ்ந்தார்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.


Next Story