போலி தங்கத்தை கொடுத்து மோசடி; 2 பெண்கள் கைது


போலி தங்கத்தை கொடுத்து மோசடி; 2 பெண்கள் கைது
x
தினத்தந்தி 28 Sept 2022 12:15 AM IST (Updated: 28 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளேகாலில் போலி தங்கத்தை கொடுத்து தங்கநகைகளை வாங்கி மோசடி செய்த தமிழகத்ைத சேர்ந்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 151 கிராம் தங்கநகைகள் மீட்கப்பட்டது.

கொள்ளேகால்:

போலி தங்கத்தை கொடுத்து மோசடி

சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகாலில் உள்ள நகைக்கடைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு 3 பெண்கள் வந்துள்ளனர். அந்த பெண்கள் கடையின் உரிமையாளரிடம் பழைய தங்க நகைகளை கொடுத்து புதிய நகைகளை வாங்குவதாக கூறினர். இதையடுத்து கடையின் உரிமையாளர் தங்க நகைகளை எடுத்து கொடுத்தார். அப்போது அந்த பெண்கள் 71 கிராம் தங்க நகைளை வாங்கினர். அதற்கு பதிலாக பழைய நகையை கொடுத்துவிட்டு சென்றனர். அதை வாங்கிய கடையின் உரிமையாளர், சிறிது நேரம் கழித்து அதனை சோதனை செய்து பார்த்தார். அந்த தங்கநகைகள் போலியானது என்று தெரியவந்தது. அப்போது தான் பெண்கள் மோசடி செய்ததை கடையின் உரிமையாளர் கண்டுப்பிடித்தார். இதுகுறித்து அவர் கொள்ளேகால் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் நகைக்கடையில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

கைது

போலீசார் விசாரணையில் அவர்கள், தமிழ்நாடு மாநிலம் சேலத்தை சேர்ந்த தனம் (வயது 54), வசந்தா(36) ஆகிய 2 பேர் என்பது தெரியவந்தது. இதில் மற்றொருவர் பெயர் தெரியவில்லை. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரையும் வலைவீசி தேடிவந்தனர்.இந்த நிலையில் நேற்று அந்த பெண்களில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 150 கிராம் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவான மற்றொரு பெண்ணை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story