வீட்டின் மீது வங்கியில் பல லட்ச ரூபாய் கடன் பெற்று மோசடி
3 குடும்பத்தினரை குத்தகைக்கு வைத்துவிட்டு வீட்டின் மீது வங்கியில் பல லட்சம் ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு:-
பெங்களூரு ஆர்.டி.நகர் பகுதியில் செயது அப்பாஸ் என்பவர் வசித்து வருகிறார். அவர் தனது வீட்டை குத்தகைக்கு விட்டு வந்தார். இந்த நிலையில் அவரது வீட்டில் 3 குடும்பங்கள் தனித்தனியே குத்தகைக்கு வசித்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து செயது அப்பாஸ், தலா ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை பணம் வாங்கி இருந்தார். இந்த நிலையில் அவர் அந்த வீட்டை காட்டி வங்கியில் பல லட்ச ரூபாய் கடனும் பெற்று இருந்தார். அவர் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் இருந்து வந்தார்.
இதற்கிடையே அவர் தலைமறைவானார். இந்த நிலையில் வாங்கிய கடனை செலுத்தாததால் வீட்டில் குத்தகைக்கு இருப்பவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் வசித்து வருபவர்கள் தங்களின் நிலைகுறித்து வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், அவர்கள் வீட்டின் உரிமையாளர் மீது ஆர்.டி.நகர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.