பெண்ணிடம் ரூ.17 லட்சம் நூதன மோசடி; மர்ம நபருக்கு சைபர் கிரைம் போலீசார் வலைவீச்சு
உடுப்பியில் ஐபோன், தங்கம், வெளிநாட்டு பணம் அனுப்பி வைப்பதாக கூறி பெண்ணிடம் ரூ.17 லட்சத்தை நூதன முறையில் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மங்களூரு;
ஐபோன், தங்கம்...
உடுப்பி மாவட்டம் பிரம்மாவரை அடுத்த சாந்தாரு கிராமத்தைச் சேர்ந்தவர் லவீனா ஜெனிஃபர் மோராஸ். கடந்த சில நாட்களுக்கு முன்பு 'ஜோவன்-871' என்ற இன்ஸ்டாகிராம் கணக்கு மூலம் லவீனாவை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், தன்னை டாக்டர் என்று அறிமுகம் செய்துள்ளார். கனடாவில் பணிபுரிந்து வருவதாக கூறி பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டார்.
இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி மீண்டும் லவீனாவை தொடர்பு கொண்ட அந்த நபர் தன்னிடம் ஐபோன், தங்கம், வௌிநாட்டு பணம் இருப்பதாக கூறினார். அதை இந்தியாவிற்கு அனுப்பி வைக்கவேண்டும். விரும்பினால் நீங்கள் வாங்கி கொள்ளுங்கள், குறைந்த விலையை கொடுத்தால் போதும் என்றார். இதை நம்பிய லவீனா, அதை தனக்கு அனுப்பி வைக்கும்படி கூறினார்.
ரூ.16.89 லட்சம் மோசடி
அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு மங்களூரு சுங்கத்துறை அலுவலகத்தில் இருந்து பேசுவதாக மர்ம நபர் ஒருவர், லவீனாவை தொடர்பு கொண்டார். அப்போது அவர் லவீனாவின் பெயருக்கு ஐபோன், தங்கம், வெளிநாட்டு பணம் வந்துள்ளது. அதை முறையாக விடுவிக்கவேண்டும் என்றால் சுங்க கட்டணம் செலுத்தவேண்டும். இல்லையென்றால் இந்த பொருட்கள் அனைத்தும் திருப்பி அனுப்பப்பட்டு விடும் என்று கூறினார்.
இதை லவீனா நம்பியதுடன், அடுத்ததாக என்ன செய்யவேண்டும் என்று கேட்டார். அப்போது மர்ம நபர் வங்கி கணக்கு எண் ஒன்றை அனுப்பி வைத்து, அதற்கு ரூ.16.89 லட்சம் அனுப்பி வைக்கும்படி கூறினார். இதை ஏற்ற லவீனா, அந்த பணத்தை அனுப்பி வைத்தார். ஆனால் ஐபோன், தங்கம், வெளிநாட்டு பணம் எதுவும் அவருக்கு வரவில்லை.
போலீசில் புகார்
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த லவீனா, உடனே இதுபற்றி உடுப்பி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இதுபற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தனிப்படை அமைத்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.