பெண்ணிடம் ரூ.3.30 லட்சம் மோசடி
வங்கி கணக்கு முடக்கப்படுவதாக கூறி பெண்ணிடம் ரூ.3.30 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அம்ருதஹள்ளி:-
பெங்களூரு அம்ருதஹள்ளி பகுதியில் வசித்து வருபவர் அம்பிகா (வயது 37). இவரது செல்போனுக்கு மர்மநபரிடம் இருந்து ஒரு குறுந்தகவல் வந்தது. அதில், உங்களது வங்கி கணக்குடன் முக்கியமான ஆவணங்களை இணைக்கவில்லை, எனவே உங்களது வங்கி கணக்கு முடக்கப்பட உள்ளது என்று கூறப்பட்டு இருந்தது. இதனால் தான் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் இருந்து தான் குறுந்தகவல் அனுப்பப்பட்டு இருப்பதாக அம்பிகா நினைத்தார். அதன்பிறகு, அம்பிகாவின் செல்போனுக்கு ஒரு லிங்க் அனுப்பி வைக்கப்பட்டு, அதில் வங்கி கணக்கு உள்ளிட்ட தகவல்களை தெரிவிக்கும்படி கூறப்பட்டு இருந்தது.
அதன்படி, அம்பிகாவும் அந்த லிங்கை கிளிக் செய்து சில தகவல்களை தெரிவித்தார். அடுத்த சிலநிமிடத்தில் அம்பிகா வங்கி கணக்கில் இருந்த ரூ.3.30 லட்சத்தையும் எடுத்து மர்மநபர்கள் மோசடி செய்து விட்டார்கள். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.