சிவமொக்கா மாவட்டத்தில் இருந்து மந்திரிசபையில் இடம் பிடிக்க 3 பேர் இடையே போட்டி


சிவமொக்கா மாவட்டத்தில் இருந்து  மந்திரிசபையில் இடம் பிடிக்க 3 பேர் இடையே போட்டி
x
தினத்தந்தி 16 May 2023 12:15 AM IST (Updated: 16 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மந்திரிசபையில் இடம் பிடிக்க சிவமொக்கா மாவட்டத்தில் 3 பேருக்கு இடையே போட்டி எழுந்துள்ளது.

சிவமொக்கா, மே.16-

கர்நாடக மந்திரிசபையில் இடம் பிடிக்க சிவமொக்கா மாவட்டத்தில் 3 பேருக்கு இடையே போட்டி எழுந்துள்ளது.

காங்கிரஸ் வெற்றி

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. சட்டசபை தேர்தல் முடிவடைந்த நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியில் முதல்-மந்திரி பதவிக்கும், மந்திரி பதவிக்கும் போட்டி எழுந்துள்ளது. முதல்-மந்திரி பதவி சித்தராமையா அல்லது டி.கே.சிவக்குமார் ஆகியோரில் யாருக்காவது ஒருவருக்கு கிடைக்கும் என்பது உறுதியாகி உள்ளது.

ஆனால் யார்-யாருக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்பதில் பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மூத்த தலைவர்கள் தங்களுக்கு முக்கிய இலாகாக்களை எதிர்பார்த்து உள்ளனர்.

சிவமொக்கா

இந்த நிலையில் சிவமொக்கா மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் 3 பேர் வெற்றி பெற்றுள்ளனர். பத்ராவதியில் சங்கமேஸ்வர், சொரப்பில் மது பங்காரப்பா, சாகரில் பேளூர் கோபாலகிருஷ்ணா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். சிவமொக்கா மாவட்டத்தை பொறுத்தவரை கர்நாடக மந்திரிசபையில் 2 அல்லது 3 பேர் இடம்பிடித்து வந்தனர்.

இந்த முறை காங்கிரஸ் ஆட்சியில் சிவமொக்காவை சேர்ந்த ஒருவருக்கு நிச்சயம் மந்திரிசபையில் இடம் கிடைக்கும் என்பது உறுதியாகி உள்ளது. ஆனால் யாருக்கு இடம் கிடைக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

யாருக்கு அதிர்ஷ்டம்?

லிங்காயத் சமூகத்தை சேர்ந்த சங்கமேஸ்வர், 4 முறை எம்.எல்.ஏ.வாக உள்ளார். அவருக்கு மந்திரிசபையில் இடம் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. மதுபங்காரப்பா, பேளூர் கோபாலகிருஷ்ணா இருவரும் ஈடிகா சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் மது பங்காரப்பா முன்னாள் முதல்-மந்திரி பங்காரப்பாவின் மகன் ஆவார். இதனால் மதுபங்காரப்பாவுக்கும் வாய்ப்பு கிடைக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனால் 3 பேருக்கும் இடையே மந்திரி பதவியை கைப்பற்றுவதில் கடும் போட்டி எழுந்துள்ளது. யாருக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Next Story