துடிப்பான இந்திய பொருளாதாரத்தால் ஜி20 நாடுகள் உத்வேகம் பெறும்; பிரதமர் மோடி பேச்சு


துடிப்பான இந்திய பொருளாதாரத்தால் ஜி20 நாடுகள் உத்வேகம் பெறும்; பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 25 Feb 2023 12:15 AM IST (Updated: 25 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

துடிப்பான இந்திய பொருளாதாரத்தால் ஜி20 நாடுகள் உத்வேகம் பெறும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

பொருளாதார நடவடிக்கைகள்

ஜி20 நாடுகள் சபையின் நிதித்துறை துணை மந்திரிகள், மத்திய வங்கி துணை கவர்னர்கள் கூட்டம் கடந்த 22-ந் தொடங்கி 2 நாட்கள் நடைபெற்றது. அதை மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக ஜி20 நாடுகள் சபையின் நிதி மந்திரிகள், மத்திய வங்கி கவர்னர்கள் மாநாடு தொடக்க விழா நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பேசிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அதில் அவர் பேசியதாவது:-

உலகின் முன்னணி பொருளாதார பலமிக்க நாடுகள் மற்றும் உலகின் நிதி நடைமுறைகளில் நிலையான தன்மை, நம்பிக்கை, உலக பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். அது தற்போது உங்களின் (ஜி20 நாடுகள்) கையில் உள்ளது. இதை செய்வது என்பது எளிதான விஷயம் அல்ல. இந்தியாவின் துடிப்பான பொருளாதார நடவடிக்கைகள் மூலம் நீங்கள் உத்வேகம் பெறுவீர்கள் என்று நான் நம்புகிறேன்.

விவாதிக்க வேண்டும்

இந்திய நுகர்வோர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் தளராத நம்பிக்கை கொண்டவர்கள், எதிர்காலத்தின் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளவர்கள். நீங்கள் சில சாதகமான ஆலோசனைகளை உலக நாடுகளின் பொருளாதாரத்திற்கு வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. உலகில் அடிமட்டத்தில் உள்ள மக்களின் நிலை பற்றி நீங்கள் விவாதிக்க வேண்டும்.

அத்துடன் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய விஷயங்களை உருவாக்கினால் மட்டுமே உலக பொருளாரதார தலைமை உலக நாடுகளின் நம்பிக்கையை பெற முடியும். ஜி20 நாடுகளின் தலைமை பதவியை வகிக்கும் இந்தியா, ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற முழக்கத்தை ஊக்குவிக்கிறது. உலகின் மக்கள்தொகை 800 கோடியை தாண்டிய பிறகும் நிலையான வளர்ச்சி, இலக்கின் வளர்ச்சி குறைந்துள்ளதை நான் உணர்கிறேன்.

உலக சவால்கள்

காலநிலை மாற்றம், அதிக கடன் போன்ற உலக சவால்களை எதிர்கொள்ள நாம் ஒருங்கிணைந்து பணியாற்றி பலதரப்பு வளர்ச்சி வங்கிகளை பலப்படுத்த வேண்டும். நிதித்துறையில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா நெருக்கடி காலத்தில் டிஜிட்டல் பண பட்டுவாடா முறை சிறப்பான முறையில் பயன்படுத்தப்பட்டது. எந்தவிதமான நேரடி தொடர்பும் இல்லாமல் இந்த வகையான பண பட்டுவாடா பரிமாற்றம் நடைபெற்றது.

தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்போது, டிஜிட்டல் நிதி முறையில் ஏற்படும் சீர்குலைவுகளை தடுக்க ஆராய வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக டிஜிட்டல் பண பட்டுவாடா முறையில் இந்தியா, மிகவும் பாதுகாப்பான, நம்பிக்கையான மற்றும் திறமையான டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகளை கொண்டுள்ளது. எங்களின் டிஜிட்டல் பண பட்டுவாடா முறை பொதுமக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டது.

நிதி உள்ளடக்கம்

இது ஆட்சி நிர்வாகம், நிதி உள்ளடக்கம், எளிமையான வாழ்க்கை சூழ்நிலையை உருவாக்குவதில் மிக முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவல் தொழில்நுட்பத்தின் தலைநகரமாக விளங்கும் பெங்களூருவில் இந்த கூட்டம் நடக்கிறது. இங்கு இந்திய நுகர்வோர் எப்படி டிஜிட்டல் பண பட்டுவாடா முறையை பயன்படுத்துகிறார்கள் என்ற அனுபவத்தை நீங்கள் பெற முடியும்.

நாங்கள் யு.பி.ஐ. மூலம் டிஜிட்டல் பண பட்டுவாடா மேற்கொள்கிறோம். இது பல நாடுகளுக்கு ஒரு உதாரணமாக திகழ்கிறது. இந்த விஷயத்தில் நாங்கள் எங்களின் அனுபவத்தை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். இதற்கு இந்த சபை ஒரு வாகனமாக இருந்து முன்னெடுத்து செல்ல முடியும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

சீர்திருத்தங்கள்

இந்த மாநாட்டில் உலக சிக்கலான கடன்கள், ஐரோப்பியாவில் நடைபெறும் போரால் உலக பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல் மற்றும் ஐ.எம்.எப்., உலக வங்கி சீர்திருத்தங்கள் குறித்து இங்கு விவாதிக்கப்படுகின்றன. இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, சவுதி அரேபியா உள்பட ஜி20 நாடுகளின் நிதி மந்திரிகள், மத்திய வங்கி கவர்னர்கள் என 75-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story