போலீஸ் சோதனையின்போது கேளிக்கை விடுதியின் ஜன்னல் வழியாக பணத்தை வீசிய சூதாட்டக்காரர்கள்


போலீஸ் சோதனையின்போது கேளிக்கை விடுதியின் ஜன்னல் வழியாக பணத்தை வீசிய சூதாட்டக்காரர்கள்
x

பண்ட்வால் அருகே போலீஸ் சோதனையின் போது கேளிக்கை விடுதியின் ஜன்னல் வழியாக சூதாட்டக்காரர்கள் பணத்தை வீசினர். இதனை பொதுமக்கள் முண்டியடித்து எடுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மங்களூரு;


கேளிக்கை விடுதியில் சூதாட்டம்

தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா பி.சி.ரோடு அருகே பிமூடா பகுதியில் கேளிக்கை விடுதி ஒன்று செயல்படுகிறது. இந்த கேளிக்கை விடுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக பண்ட்வால் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் கேளிக்கை விடுதிக்குள் சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது கேளிக்கை விடுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பது உறுதியானது. இதையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 28 பேரை மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தனர்.

ஜன்னல் வழியாக வீசினர்

முன்னதாக போலீசாரை கண்டதும் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாங்கள் வைத்திருந்த ரூபாய் நோட்டுகளை கேளிக்கை விடுதியின் ஜன்னல் வழியாக வீசியுள்ளனர். இதனால் அப்பகுதி சாலையில் பணம் மழை பொழிந்துள்ளது.

பொதுமக்கள் முண்டியடித்து...

இதைபார்த்து அதிர்ந்துபோன அப்பகுதியினர் கீழே விழுந்த பணத்தை முண்டியடித்து கொண்டு எடுத்தனர். இதனால் பொதுமக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையறிந்த போலீசார் பொதுமக்களை விரட்டியடித்து பணத்தை பறிமுதல் செய்தனர். இதில் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ரூ.1 லட்சத்துக்கு மேல் ஜன்னல் வழியாக வீசியுள்ளனர்.

ஆனால் போலீசாரால் ரூ.26 ஆயிரம் மட்டுமே மீட்கப்பட்டது. மற்ற பணத்தை பொதுமக்கள் எடுத்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பண்ட்வால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story