வேட்பாளர்களை மையமாக வைத்து சூதாட்டம்


வேட்பாளர்களை மையமாக வைத்து சூதாட்டம்
x

சட்டசபை தேர்தல் முடிந்த நிலையில் இன்று ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இந்த நிலையில் வேட்பாளர்களை மையமாக வைத்து சூதாட்டம் நடப்பதாக சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூரு:-

224 தொகுதிகள்...

ஐ.பி.எல். உள்ளிட்ட கிரிக்கெட் போட்டிகள் மற்றும் சில பொழுதுபோக்கு விளையாட்டுகள் மீது பணம் வைத்து சூதாட்டம் நடந்திருப்பதை நாம் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் எம்.எல்.ஏ. வேட்பாளர்கள் மீது பணம் வைத்து, அதுவும் லட்சம், கோடி என்ற கணக்கில் பணத்தை வைத்து சூதாட்டம் நடைபெறும் சம்பவம் கர்நாடகத்தில் சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்கிடையே பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மீது அவர்களது தொண்டர்கள் கோடிகளில் பணம் வைத்து சூதாடி வருகின்றனர். தங்களுடைய வேட்பாளர் உறுதியாக வெற்றி பெறுவார் எனவும், அதற்கு இணையாக வீடு, நிலம், கால்நடைகள், பணம், வீட்டு பத்திரம் உள்பட பலவற்றை பணயம் வைத்தும் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சோமண்ணா

சாம்ராஜ்நகர் நகரசபை உறுப்பினர் கிரண் என்பவரது வீட்டில் போலீசார் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவரது வீட்டில் ரூ.1 கோடி ரொக்கம் இருந்தது. இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தியதில் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்து நடத்தப்பட்ட சூதாட்டத்திற்கு பயன்படுத்துவதற்கு அந்த பணத்தை வைத்துள்ளது தெரிந்தது. இதேபோல் மைசூரு மாவட்டம் பிரியப்பட்டணாவில் காங்கிரஸ் வேட்பாளர் வெங்கடேஷ் தான் வெற்றி பெறுவார் என கூறி வாலிபர் ஒருவர் வீடியோவில் சவால் விட்டுள்ளார். அதில் வெங்கடேஷ் வெற்றி பெற்றால் நிலம், பணம் உள்ளிட்டவற்றை தருவதாக சூதாட்டத்திற்கு அழைத்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

மேலும் சோமண்ணாவின் ஆதரவாளர் ஒருவர் வெளியிட்ட வீடியோவில், சித்தராமையாவை தோற்கடித்து சோமண்ணா வெற்றி பெறுவார் என்று கூறினார். மேலும் அவர் வெற்றி பெற்றால் 3,300 சதுரமீட்டர் நிலத்தை கொடுப்பதாக சவால் விட்டுள்ளார். அந்த நிலத்தின் மதிப்பு பல கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

ஆவணங்கள்

மண்டியா மாவட்டம் நாகமங்களா பகுதியில் ஜனதா தளம்(எஸ்) கட்சி, காங்கிரஸ் இடையே சூதாட்டம் நடத்தப்பட்டது. அதில் ஆடுகள், கோழி உள்ளிட்டவற்றை சூதாட்ட பொருளாக பயன்படுத்தினர். இதுதொடர்பாக மண்டியா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

கொப்பல் தொகுதியில் சிவராஜ் தங்கடகி தான் வெற்றி பெறுவார் எனவும், அவர் வெற்றி பெற்றால் ரூ.1½ கோடி மதிப்பிலான 4 ஏக்கர் நிலத்தை தருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக

அந்த நிலத்தின் ஆவணங்களை, அந்த நபர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மைசூரு கே.ஆர்.நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரவிக்குமாரை வைத்து சூதாட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதில் ரவிக்குமர் வெற்றி வெற்று, சா.ரா.மகேஷ் தோல்வி அடைந்தால் ரூ.5 லட்சம் உடனடியாக வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.


Next Story