குலாம் நபி ஆசாத் 14 நாட்களில் புது கட்சி அறிவிப்பு வெளியிடுவார்; முன்னாள் மந்திரி பேட்டி
காங்கிரசில் இருந்து வெளியேறிய குலாம் நபி ஆசாத் 14 நாட்களில் புது கட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என முன்னாள் மந்திரி பேட்டியில் கூறியுள்ளார்.
ஸ்ரீநகர்,
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகும் முடிவை அக்கட்சியின் மூத்த தலைவர் மற்றும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியான குலாம் நபி ஆசாத் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்து விலகும் முடிவை அவர் எடுத்துள்ளார்.
இதுபற்றி காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் வழியே அவர் தகவல் தெரிவித்து உள்ளார். குலாம் நபி ஆசாத் விலகல் என்பது கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
கட்சியில் இருந்து விலகிய பின்னர் ராகுல் காந்தி மீது பல்வேறு குற்றசாட்டுகளை குலாம் நபி ஆசாத் முன்வைத்துள்ளார். இதற்கு, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் முன்னாள் மந்திரியான தாஜ் முகைதீன் காங்கிரசில் இருந்து விலகியுள்ளார். இதன்பின்பு, குலாம் நபி ஆசாத் தலைமையிலான முன்னணியுடன் தன்னை அவர் இணைத்து கொண்டார்.
இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, நாங்கள் ஒரு சொந்த கட்சியை தொடங்குவோம். இதுபற்றி 14 நாட்ளில் அறிவிப்பு வெளியிடப்படும். இதற்காக தேர்தல் ஆணையத்திடம் பேசி கொண்டிருக்கிறோம் என கூறியுள்ளார்.
குலாம் நபி ஆசாத் தலைமையிலான கட்சியானது, ஜம்மு மற்றும் காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி அமைக்க திறந்த நிலைப்பாட்டுடன் இருக்கும் என அவர் கூறியுள்ளார். நாங்கள் எந்த கட்சியுடனும் இணையமாட்டோம். ஆனால், தொகுதிகள் தேவைப்படும்போது, கூட்டணி அரசு அமைப்போம் என்று அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் திறமையுடன் இருந்ததற்காக முக்கிய பதவிகளில் ஆசாத் நீண்டகாலம் இருந்துள்ளார் என கூறியுள்ள அவர், பா.ஜ.க.வுடன் ஆசாத் தொடர்பில் உள்ளார் என்று பிரசாரம் செய்து வரும் காங்கிரஸ் தலைவர்களையும் விமர்சித்து உள்ளார். பா.ஜ.க.வுடன் எங்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.