பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.43½ லட்சம் தங்கம் சிக்கியது


பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.43½ லட்சம் தங்கம் சிக்கியது
x

பாங்காக்கில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.43½ லட்சம் தங்கம் சிக்கியது.

பெங்களூரு:-

பாங்காக்கில் இருந்து...

பெங்களூரு புறநகர் தேவனஹள்ளியில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் கிடுக்கிப்பிடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பாங்காக்கில் இருந்து விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணியின் நடவடிக்கையில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அவரை தனியாக அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அவரது கால் பாதப்பகுதியில் 2 தங்க கட்டிகள் இருந்தது தெரிந்தது.

ரூ.43½ லட்சம் தங்கம்

இதையடுத்து அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பாங்காக்கில் இருந்து பெங்களூருவுக்கு நூதன முறையில் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 502 கிராம் தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். இதேபோல் மற்றொரு பயணியை பிடித்து அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது அவரிடம் 197 கிராம் எடை கொண்ட தங்கம் இருந்தது. அதையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஒட்டுமொத்தமாக ரூ.43½ லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story