தொழில் அதிபரிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி கைது


தொழில் அதிபரிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி கைது
x
தினத்தந்தி 5 March 2023 12:15 PM IST (Updated: 5 March 2023 12:15 PM IST)
t-max-icont-min-icon

தொழிற்சாலை உரிமத்தை புதுப்பித்து கொடுக்க தொழில் அதிபரிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.

சிவமொக்கா-

தொழில் அதிபர்

சிவமொக்கா (மாவட்டம்) டவுன் வினோபா நகரில் வசித்து வருபவர் ராகேஷ் படேல். தொழில் அதிபரான இவர் டவுனில் உள்ள தொழிற்பேட்டையில் தொழிற்சாலை நடத்தி வருகிறார். அதற்காக அவர் உரிய அனுமதியும் பெற்றிருந்தார். இந்த நிலையில் தொழிற்சாலை உரிமத்துக்கான காலம் காலாவதி ஆனது. இதையடுத்து அவர் தனது தொழிற்சாலைக்கான உரிமத்தை புதுப்பிக்க சம்பந்தப்பட்ட துறையில் விண்ணப்பித்தார்.

அவரது விண்ணப்பம் தொழிற்சாலை மற்றும் கொதிகலன் துறை துணை இயக்குனர் விட்டல் நாயக் என்பவரிடம் பரிசீலனைக்கு சென்றது. விண்ணப்பத்தை பரிசீலித்த அதிகாரி விட்டல் நாயக், உடனடியாக அலுவலக உதவியாளர் மூலம் ராகேஷ் படேலை நேரில் அழைத்து பேசினார்.

ரூ.30 ஆயிரம் லஞ்சம்

அப்போது தனக்கு ரூ.30 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் உடனடியாக தொழிற்சாலையின் உரிமத்தை புதுப்பித்து தருவதாக கூறினார். அதற்கு ராகேஷ் படேலும் சம்மதம் தெரிவித்தார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர் இதுபற்றி சிவமொக்கா லோக் அயுக்தா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராகேஷ் படேலிடம் சில அறிவுரைகள் வழங்கினர்.

பின்னர் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகள் அடங்கிய ரூ.15 ஆயிரத்தை கொடுத்து அதை அதிகாரி விட்டல் நாயக்கிடம் கொடுக்குமாறு கூறினர். அதன்பேரில் விட்டல் நாயக்கின் அலுவலகத்துக்கு சென்ற ராகேஷ் படேல், அவரது உதவியாளரிடம் லஞ்சப்பணத்தை கொடுத்தார்.

கைது

அந்த லஞ்சப்பணத்தை உதவியாளரிடம் இருந்து விட்டல் நாயக் பெற்றார். அப்போது அங்கு மறைந்திருந்த லோக் அயுக்தா அதிகாரிகள் அதிரடியாக அவரது அலுவலகத்துக்குள் புகுந்து சோதனை நடத்தி லஞ்சப்பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் விட்டல் நாயக்கையும், அவரது உதவியாளரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து 2 பேரிடமும் லோக் அயுக்தா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Next Story