அரசு பள்ளிகளுக்கு 'சாக்பீஸ்' வாங்க கூட நிதி இல்லையா?; கர்நாடக அரசுக்கு ஜனதா தளம் (எஸ்) கண்டனம்
அரசு பள்ளிகளுக்கு ‘சாக்பீஸ்' வாங்க கூட நிதி இல்லையா? என்று கூறி கர்நாடக அரசுக்கு ஜனதா தளம் (எஸ்) கண்டனம் தெரிவித்துள்ளது.
பெங்களூரு:
ஜனதா தளம் (எஸ்) கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது:-
அரசே சதித்திட்டம்
கர்நாடகத்தில் அரசு பள்ளிகளுக்கு தேவையான முக்கியமான 'சாக்பீஸ்' கூட நிதி இல்லாத நிலைக்கு கர்நாடக அரசு தள்ளப்பட்டுள்ளது. இதை விட வெட்கக்கேடான செயல் வேறு என்ன உள்ளது?. ஏழை மக்களின் குழந்தைகள் பயிலும் அரசு பள்ளிகளில் இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது வேதனை அளிப்பதாக உள்ளது. பள்ளிகளின் நிர்வாகத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டை குறைத்து பள்ளி நிர்வாகிகள் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கர்நாடக அரசின் இந்த கொடூரமான மனநிலை ஏற்கத்தக்கது அல்ல. கர்நாடக அரசை கண்டிக்கிறோம்.
அரசின் அலட்சியப்போக்கால் அரசு பள்ளிகள் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளை மூடிவிட்டு தனியார் பள்ளிகளுக்கு ஊக்கம் அளிக்க அரசே சதித்திட்டம் தீட்டியுள்ளதா?. மொத்தத்தில் ஏழை மக்களின் குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைக்க கூடாது என்று மோசம் செய்ய முயற்சி நடக்கிறது. ஏழை மக்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைக்காமல், அவர்கள் உலகில் போட்டி போட முடியாத நிலை உள்ளது. இதனால் அந்த குழந்தைகளுக்கு நல்ல வேலை கிடைக்காமல் பாதிக்கப்படுகிறார்கள்.
தரமான கல்வி
பஞ்சரத்னா திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் தரமான கல்வியை வழங்க வேண்டும் என்று நாங்கள் திட்டமிட்டுள்ளோம். வசதி படைத்தவர்களுக்கு உதவி செய்ய தனியார் அமைப்புகள் உள்ளன. ஆனால் கிராமப்புற மக்களின் குழந்தைகளில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். அதற்கு தேவையான அர்ப்பணிப்பு, அக்கறை எங்களிடம் உள்ளது.
இவ்வாறு ஜனதா தளம் (எஸ்) தெரிவித்துள்ளது.