ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து கர்நாடகத்தில் லோக் அயுக்தாவுக்கு அனுமதி வழங்க அரசு முடிவு
ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து கர்நாடகத்தில் லோக் அயுக்தாவுக்கு அனுமதி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.
பெங்களூரு: ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து கர்நாடகத்தில் லோக் அயுக்தாவுக்கு அனுமதி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.
ஐகோர்ட்டு உத்தரவு
கர்நாடகத்தில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் முதல்-மந்திரியாக இருந்த சித்தராமையா, லோக் அயுக்தாவின் அதிகாரத்தை குறைத்து ஊழல் தடுப்பு படையை கொண்டு வந்தார். இதற்கு எதிராகவும், கர்நாடகத்தில் மீண்டும் லோக் அயுக்தாவுக்கு முழு அதிகாரம் வழங்க உத்தரவிட கோரி கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனுக்களை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு, கடந்த 11-ந் தேதி மாநிலத்தில் ஊழல் தடுப்பு படைக்கு தடை விதித்ததுடன், மீண்டும் லோக் அயுக்தாவுக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்ப்பு கூறி இருந்தது.
மேலும் ஊழல் தடுப்பு படையில் பதிவான வழக்குகள், அங்கு பணியாற்றும் போலீஸ் அதிகாரிகளை லோக் அயுக்தாவுக்கு மாற்றியும் ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டு 10 நாட்கள் ஆகியும் அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக லோக் அயுக்தாவுக்கு முழு அதிகாரம் வழங்குவது, ஊழல் தடுப்பு படையை தடை செய்வது குறித்து இதுவரை அரசாணை எதுவும் வெளியிடப்படவில்லை.
10 நாட்கள் ஆகியும்...
இதன் காரணமாக கடந்த 10 நாட்களாக ஊழல் தடுப்பு படையில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள், லோக் அயுக்தாவுக்கு பணியாற்ற முடியாமலும், ஊழல் தடுப்பு படையில் பணியாற்ற முடியாமலும் திணறி வருகின்றனர். அதே நேரத்தில் கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய போவதில்லை என்றும், பா.ஜனதாவின் தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி மாநிலத்தில் மீண்டும் லோக் அயுக்தா கொண்டு வரப்படும் என்றும் முதல்-மநதிரி பசவராஜ் பொம்மை தெரிவித்திருந்தார். இதன்மூலம் கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவுப்படி மீண்டும் லோக் அயுக்தா முழு அதிகாரத்துடன் செயல்படுவது உறுதியானது.
இந்த நிலையில், கர்நாடகத்தில் லோக் அயுக்தாவுக்கு முழு அதிகாரம் வழங்குவது குறித்து அட்வகேட் ஜெனரல் பிரபுலிங்க நாவடகி, மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் மற்றும் சட்ட நிபுணர்களுடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தி இருந்தார்.
அனுமதி வழங்க முடிவு
மாநிலத்தில் லோக் அயுக்தாவுக்கு முழு அதிகாரம் வழங்குவது குறித்து அறிக்கை அளிக்கும்படியும், அதில் இருக்கும் சட்ட பிரச்சினைகள் குறித்து தெரிவிக்கும்படியும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவுறுத்தி இருந்தார். அந்த் அறிக்கை கிடைத்ததும் மாநிலத்தில் லோக் அயுக்தாவுக்கு முழு அதிகாரம் வழங்கி அனுமதி அளிப்பதுபற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் மாநிலத்தில் மீண்டும் லோக் அயுக்தாவை கொண்டு வருவதற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையும் முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அடுத்த மாதம் (செப்டம்பர்) நடைபெற உள்ள சட்டசபை கூட்டத் தொடர்அல்லது மந்திரிசபை கூட்டத்தில் விரிவாக ஆலோசித்து லோக் அயுக்தா சட்டத்தில் திருத்தம் செய்ய குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.