அரசு பெண் டாக்டர் மர்மசாவு


அரசு பெண் டாக்டர் மர்மசாவு
x
தினத்தந்தி 7 Dec 2022 12:15 AM IST (Updated: 7 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சித்ரதுர்கா பெண் டாக்டர் மர்ம சாவில் கிடைத்த பிரேத பரிசோதனை அறிக்கையில் துப்பாக்கியால் சுடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் தற்கொலையா? கொலையா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிக்கமகளூரு:-

பெண் டாக்டர் மர்மசாவு

சித்ரதுர்கா டவுன் வி.பி.படாவனேயில் உள்ள அரசு தொழுநோய் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வந்தவர் ரூபா (வயது 40). இவர் அதே ஆஸ்பத்திரியில் தொழுநோய் கட்டுபாட்டு பிரிவு தலைவராகவும் இருந்து வந்தார். இவரது கணவர் ரவி. எலும்புமுறிவு டாக்டரான இவர், அந்தப்பகுதியில் கிளினிக் வைத்து உள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ரூபா வீட்டில் மர்மமான முறையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதுபற்றி அறிந்ததும் சித்ரதுர்கா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே ரூபா வழுக்கி விழுந்து தலையில் அடிப்பட்டு உயிரிழந்ததாக ரவி தெரிவித்தார்.

பிரேத பரிசோதனை அறிக்கை

இந்த நிலையில் ரூபாவின் பிரேத பரிசோதனை அறிக்கை போலீசாருக்கு கிடைத்தது. அதில், ரூபாவின் தலையில் துப்பாக்கி குண்டு இருந்ததும், அவர் துப்பாக்கியால் சுடப்பட்டதில் உயிரிழந்ததும் தெரியவந்தது. ஆனால் அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டாரா அல்லது ரவி அவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தாரா என்பது உறுதியாக தெரியவில்லை.

முன்னதாக ரூபாவின் வீட்டில் இருந்து அவர் எழுதியதாக கடிதம் ஒன்றும் போலீசாரிடம் சிக்கி உள்ளது. அந்த கடிதத்தில், நான் தற்கொலை செய்துகொள்ள போகிறேன். எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று எழுதி இருந்தார். இதனால் ரூபா, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

கணவரிடம் விசாரணை

இந்த நிலையில் ரூபா தற்கொலை செய்யவில்லை என்றும், அவரை ரவி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார் என்றும், ரூபா எழுதியது போன்ற கடிதத்தை ரவி எழுதியதாகவும் சித்ரதுர்கா போலீசில் ரூபாவின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். இதனால், ரூபா கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்பது மர்மமாக உள்ளது.

இதுகுறித்து சித்ரதுர்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரூபாவின் கணவர் ரவியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story