கழுதை பண்ணை நடத்தி வரும் பட்டதாரி வாலிபர்


கழுதை பண்ணை நடத்தி வரும் பட்டதாரி வாலிபர்
x

கர்நாடகத்தில், பட்டதாரி வாலிபர் ஒருவர் கழுதை பண்ணை நடத்தி வருகிறார்.

மங்களூரு: தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பண்ட்வால் பகுதியை சேர்ந்தவர் சீனிவாச கவுடா (வயது 42). பி.ஏ. பட்டதாரியான இவர் ஐ.டி.நிறுவனத்தில் பணி செய்துவந்தார். இந்த நிலையில் அவர் ஐ.டி. நிறுவனத்தில் இருந்து வெளியேறி, சொந்தமாக கால்நடை பண்ணை வைக்க முடிவு செய்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் ஆடு, மாடு, முயல் உள்ளிட்ட விலங்குகளை பண்ணை அமைத்து வளர்த்து வந்தார். இந்த நிலையில் அவர் கழுதைகளை வாங்கி அவற்றை பராமரிக்க முடிவு செய்தார். இதற்காக அவர் 20 கழுதைகளை வாங்கி வளர்த்து வருகிறார்.

இதுகுறித்து சீனிவாச கவுடா பேசுகையில் கூறியதாவது:- ஐ.டி. துறையில் பணி செய்துவந்த எனக்கு விலங்குகள் மீது மிகுந்த ஆர்வம். எனவே நான் எனது வேலையை விடுத்து, சொந்த ஊரில் வளர்ப்பு பிராணிகள் பண்ணை வைத்து நடத்தி வருகிறேன். தற்போதைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியால் சலவை தொழில் மிகவும் நலிவடைந்துள்ளது.இதனால் கழுதைகள் பயன்பாடு குறைந்து கொண்டே வருகிறது. இதை கருத்தில் கொண்டு கழுதை பண்ணை அமைக்க முடிவு செய்தேன். அதன்படி கடந்த 8-ந் தேதி கர்நாடகத்தின் முதல் கழுதை பண்ணையை தொடங்கி உள்ளேன்.தற்போது என்னிடம் 20 கழுதைகள் உள்ளன. 30 மில்லி கழுதைப்பால் ரூ.150-க்கு விற்கப்படுகிறது. அழகு சாதன பொருட்கள் செய்ய கழுத்தைப்பால் பயன்படுவதால், அதற்கு நல்ல விலை உண்டு. தொடங்கி சிறிது நாட்களிலேயே ரூ.17 லட்சத்துக்கான டெண்டர் கிடைத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story