கிராம பஞ்சாயத்து அலுவலகம் முற்றுகை
அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க கோரி கிராம பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு தலித் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
சிக்கமகளூரு:-
சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா பாலேஒன்னூர் கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் முறையான அடிப்படை வசதிகள் இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக குடிநீர், கால்வாய், சாலைகள், குப்பை கொட்டுவதற்கான இடங்கள் என பல அடிப்படை குறைபாடுகள் உள்ளது. இதனை உடனே சரி செய்து கொடுக்கவேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த கிராம மக்கள் மற்றும் தலித் அமைப்பினர் நேற்று முன்தினம் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் வீடுகள் இல்லாதவர்களுக்கு அரசு வீடுகள் கட்டி கொடுக்கவேண்டும். சுத்தமான குடிநீர் வழங்கவேண்டும். சாலைகளை சீரமைக்கவேண்டும். மின்சார தட்டுப்பாடு உள்ளது. அதனை சீர் செய்யவேண்டும். பிற்படுத்தப்பட்டவர்கள் என்று அதிகாரிகள் அலட்சியமாக செயல்படக்கூடாது என்று கூறினர். இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளனர். மேலும் இதுகுறித்து பாலேஒன்னூர் கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி நாகேந்திராவிடம் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவை வாங்கிய அவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.