காஷ்மீரில் வருகிற 30-ந்தேதி ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் பிரமாண்ட நிறைவு விழா
காஷ்மீரில் வருகிற 30-ந்தேதி ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் நிறைவு விழாவை மிக பிரமாண்டமாக நடத்த காங்கிரஸ் கட்சியினர் முடிவு செய்து உள்ளனர்.
ஜம்மு,
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் 7-ந்தேதி அவர் கன்னியாகுமரியில் தனது யாத்திரையை தொடங்கினார். தொடர்ந்து அவர் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக நடைபயணம் செய்து கடந்த 19-ந்தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்குள் நுழைந்தார்.
ஒவ்வொரு மாநிலத்திலும் அவருக்கு காங்கிரசார் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். காங்கிரஸ் ஆளும் மாநில முதல்-மந்திரிகள், முன்னாள் மத்திய மந்திரிகள், எதிர்க்கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் என பலர் ராகுல் காந்தி நடைபயணத்தில் கலந்து கொண்டனர். சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் சில மாநிலங்களில் நடந்த யாத்திரையில் பங்கேற்றனர். இன்று ராகுல் 130-வது நாளாக காஷ்மீரில் யாத்திரையை தொடங்கி நடந்து வருகிறார். அவருடன் காங்கிரஸ் தலைவர்கள், மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று உள்ளனர்.
காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருவதால் அவருக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3,970 கிலோ மீட்டர்தூரம் நடைபயணம் மேற்கொண்டு இருக்கும் ராகுலின் ஒற்றுமை யாத்திரை வருகிற 30-ந்தேதி (திங்கட்கிழமை) நிறைவுபெறுகிறது.
இந்த நிறைவு விழாவை மிக பிரமாண்டமாக நடத்த காங்கிரஸ் கட்சியினர் முடிவு செய்து உள்ளனர். ஸ்ரீநகரில் நடைபெறும் நிறைவு நாள் விழாவில் ராகுல் காந்தி தேசிய கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுகிறார். அதே சமயத்தில் அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில தலைவர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள், காங்கிரஸ் அலுவலகங்களில் கொடி ஏற்றுவார்கள். இந்த நிறைவு நாள் விழாவை மிக பிரமாண்டமாக நடத்த காங்கிரஸ் கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.
இதில் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் இந்த விழாவில் பங்கேற்க கூட்டணி கட்சியான தி.மு.க. மற்றும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட 23 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
உத்தரபிரசேதத்தில் நடைபயணம் சென்ற போது சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி உள்ளிட்ட தலைவர்கள் ராகுலுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதனால் அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி உள்ளிட்ட தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நிறைவு விழாவுக்கான ஏற்பாடுகளை காங்கிரசார் தீவிரமாக செய்து வருகின்றனர்.